

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 40 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி தனிநபர்களிடமிருந்து கோயில் நிர்வாகம் மீட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரியகுமாரபாளைம் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பெரியகுமாரபாளைம் கிராமத்தில் பழநிதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கோரி தாராபுரம் சார்பு நீதிமன்றம், கோயம்புத்தூர் மாவட்ட அமர்வுநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுத்து இருந்தனர். இதனை எதிர்த்து பழநி கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நிலங்கள் அனைத்தும் பழநி கோயிலுக்கு சொந்தமானது என தீர்ப்புவழங்கப்பட்டது. இதனடிப்படையில் 60 ஏக்கர் நிலத்தில் இருந்த தனி நபர்களின் ஆக்கிரமிப்புக்கள் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அனிதா முன்னிலையில் அகற்றப்பட்டு, பழநி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் மீட்கப்பட்ட நிலங்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது பழநி கோயில் துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 40 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தனிநபர்கள் பிடியில் இருந்த பழநி கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு சுமார்ரூ.25 கோடி என மதிப்பிடப்பட்டுஉள்ளது.