

தேர்ச்சி சதவீதத்தை காரணம் காண்பித்து தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே வன்னிவேலம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு முதலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மட்டுமே இருந்தது. அப்போது இங்கு படித்த பெரும்பாலான குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு தனியார் பள்ளியில் சேர்ந்தனர்.
இந்நிலையில் இப்பள்ளி கடந்த 2009-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், புதூர், முத்துலிங்காபுரம், சின்னா ரெட்டியபட்டி உள்ளிட்ட கிராமங் களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வை 44 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தனியார் பள்ளிகளால் வெளியேற்றப்பட்ட மாணவர்களும் உண்டு.
எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக சில தனியார் பள்ளிகள் சுமாராகப் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை ஏதாவது காரணங்களைக் கூறி பள்ளியில் இருந்து நீக்கிவிடுகின்றன. அவ்வாறு தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் தான் கை கொடுக்கின்றன. தனியார் பள்ளிகளால் வெளியேற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 16 பேரில் 14 பேரை ஆசிரியர்கள் தேர்ச்சியடையச் செய்துள்ளனர்.
2013-14-ம் கல்வியாண்டில் தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாண வனும், 2014-15-ம் கல்வியாண்டில் சேர்ந்த 6 மாணவர்களும், 2015-16-ம் கல்வியாண்டில் சேர்ந்த 9 பேரில் 7 மாணவர்களும் இந்த பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் மட்டுமின்றி உள்ளூர் இளைஞர்கள் தினமும் இரவு 7 முதல் 10 மணி வரையும், காலை 5 முதல் 7 மணி வரையும் பாடம் நடத்துகின்றனர். இதற்காக அந்த இளைஞர்கள் இரவு முழுவதும் பள்ளியிலேயே மாணவர்களுடன் தங்கி விடுகின்றனர்.
இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சு.பாஸ்கரன் கூறியதாவது: ஒன்றுமே தெரியாத மாணவ னையும் தேர்ச்சியடையச் செய்வது தான் ஆசிரியரின் வேலை. தனியார் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர் களுக்கு அரசு பள்ளிகள் தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களை புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறை யாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச் செய்யலாம்.
கடந்த ஆண்டு தேர்வில் தனியார் பள்ளியில் இருந்து வெளி யேற்றப்பட்டு இந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒரு மாணவன் 400 மதிப்பெண்களுக்கு மேலும், மற்றொரு மாணவன் அறிவியலில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.