Published : 11 May 2022 06:01 AM
Last Updated : 11 May 2022 06:01 AM

சென்னை மாநகராட்சியில் புதிதாக 200 நகர்ப்புற மருத்துவமனைகள்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் 200 நகர்ப்புற மருத்துவமனைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி, ‘‘புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்‘‘ என்றார்.

இதற்குப் பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘கிராமப்புறங்களில் சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் உள்ள பெரியமருத்துவமனைகளில் மக்கள்கூட்டம் அதிகம் கூடுவதை குறைக்கும் வகையில், நகர்ப்புறங்களில் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும், தலாஒரு மருத்துவமனை வீதம் மொத்தம் 200 நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திரு.வி.க. நகரில் 7 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு 7 மருத்துவமனைகள் அமைய உள்ளன. எனவே, ஏற்கெனவே உள்ள மருத்துவமனையில் இருக்கும் 60 படுக்கைகளே போதுமானவை.

தமிழகத்தில் தற்போது மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,000 பணிடங்களை நிரப்ப, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், காலி பணியிடங்கள் நிரப்பப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x