Published : 11 May 2022 06:11 AM
Last Updated : 11 May 2022 06:11 AM

ஜாதி ரீதியாக இளையராஜா குறித்து விமர்சனம்: ஈவிகேஎஸ், கி.வீரமணி மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை: பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா அண்மையில் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதியிருந்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகின. சில அமைப்பினர், இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இளையராஜா மறுத்துவிட்டார்.

இந்நிலையில் அண்மையில் ஈரோட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடந்த விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இசையமைப்பாளர் இளையராஜா குறித்து ஜாதி ரீதியில் அவதூறான கருத்துகளை கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த புரட்சித் தமிழகம் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை செய்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், சென்னை பெருநகர காவல் துறை ஆணையருக்கும், சென்னை ஆட்சியருக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் அடிப்படையில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x