Published : 21 May 2016 02:49 PM
Last Updated : 21 May 2016 02:49 PM

மாற்று அரசியலின் களமாக ம.ந. கூட்டணி இல்லை: வானதி சீனிவாசன் கருத்து

மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியலின் களமாக இல்லை; இந்த தேர்தலில் மநகூ தலைவர்களின் ஆளுமை கேள்விகுள்ளாகி இருக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 7.9 சதவீதம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. தெற்கு தொகுதியில் மட்டும் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். கோவை மாவட்டத்தில் பல தொகுதிகளில் மூன்றாமிடம் பெற்று இருக்கிறோம்.

மாற்று அரசியல் என்ற சூழல், மக்கள் நலக் கூட்டணியை விட பாஜகவின் நம்பகத்தன்மையே இந்த தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியலின் களமாக இல்லை.

அதன் தலைவர்கள் வேறு வழியில்லாமல் ஒன்றிணைந்தார்களே தவிர மாற்று அரசியல் அவர்களிடம் இல்லை.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பலம் இழந்து இருக்கிறார்கள்.

அந்த கூட்டணி சுருங்கிப்போய் இருப்பதுடன் அதன் தலைவர்களின் ஆளுமையும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும். தமிழக அரசியலில் மக்களின் ஏழ்மை, அறியாமை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை இலவச வாக்கு வங்கியாக மாற்றி ஆட்சியை பிடிப்பது வழக்கமாகி விட்டது.

வரும் காலங்களில் இந்நிலை மாறும். பாஜகவுக்கு சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடிய வாய்ப்பில்லை என்றாலும் சட்டப்பேரவைக்கு வெளியே ஆக்கப்பூர்வமான கட்சியாக செயல்படுவோம். தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தலை தள்ளி வைப்பதன் மூலம் நியாயமாகத் தேர்தல் நடத்த முடியாது.

பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் மீது பயம் ஏற்படுவதுடன் மக்களுக்கும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை ஏற்படும்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தீவிர வழிமுறைகளைக் கண்டறிவதுடன், சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். புதிய ஆட்சி அமைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள். இலவசங்கள் கொடுப்பது பற்றி தமிழக மக்களுக்கு அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டு காலத்தில் உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில் போன்றவற்றுக்கு போடப்பட்ட திட்டங்களையும் அதனால் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x