Published : 11 May 2022 06:04 AM
Last Updated : 11 May 2022 06:04 AM

இலங்கையில் ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் ஏற்படும் ஆபத்து: திருமாவளவன் கருத்து

தூத்துக்குடி: “இலங்கையில் ஏற்பட்ட நிலை போன்று இந்தியாவிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது” என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்கள் போராட்டங்களால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சபதவியில் இருந்து விலகும் நிலைஏற்பட்டுள்ளது. மக்கள் சக்தி மகத்தான சக்தி என்பதை இலங்கை வாழ் மக்கள் உணர்த்தியுள்ளனர். ஈவு இரக்கமின்றி இனவெறி ஆட்டம் நடத்தி, ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சவுக்கு இன்று சிங்கள இனத்தைச் சார்ந்த மக்களே பாடம் புகட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கும் ஒரு படிப்பினை. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் அனைத்தையும் ஒற்றைத் தன்மைக்கு இட்டுச்செல்லும் போக்கு இங்கே வலுபெற்றுள்ளது. இலங்கையில் நிகழ்ந்ததை இங்கே இருப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சென்னையில் ஏழை, எளியமக்களின் குடிசைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். காவல் துறை, நீதித்துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான காரணங்களை கண்டறிய தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். திமுக அரசு பழையஓய்வூதிய திட்டத்தை தரும் என்றநம்பிக்கையோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய ஆதரவை கடந்த தேர்தலில் அளித்துள்ளார்கள். கட்டாயம் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்தியில் பிரதமர் மோடி அரசு நீடிக்கும் வரை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும்உயர்ந்து கொண்டே தான் இருக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதில் தான் பிரதமர் கவனமாக இருக்கிறார்.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத மாற்று அணி என்பது பாஜகவுக்கு துணை செய்கின்ற அணியாக தான் அமைந்துவிடும். பாஜக எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் அணிதிரள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஓராண்டு காலத்தில் அனைத்து தரப்பினரும் பாராட்டும் நல்லாட்சியை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தான் எதிர்க்கட்சி. பாஜக என்ன முயற்சி செய்தாலும் அந்த இடத்தை பிடிக்க முடியாது. இவ் வாறு திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x