

கடந்த 6 ஆண்டுகளாக நடக்க முடியாமல் அவதிப்பட்ட இளைஞ ருக்கு இந்தியாவில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவர் மற்றும் உயிரோடு இருப்பவரிடம் இருந்து சவ்வுகளை எடுத்து பொருத்தி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் ஐசக் (28). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இடது கால் முட்டியின் உள்ளே தொடை எலும்பையும், கால் எலும்பையும் இணைக்கும் 3 சவ்வுகள் கிழிந்திருப்பது தெரியவந்தது. அதே காலில் ரத்தக்குழாயும் சேதமடைந்து இருந்தது. ரத்தக்குழாயை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது காலில் இருந்து 3 சவ்வுகளை எடுத்து இடது காலில் கிழிந்த சவ்வுக்கு பதிலாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். ஆனால் அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது.
இதனால் கடந்த 6 ஆண்டுகளாக நடப்பதற்கே சிரமப்பட்டு வந்த ஐசக், கடந்த மாதம் சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மூட்டு உள்நோக்கி கருவி சிகிச்சைத் துறையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு திசு வங்கியில் இருந்து மூளைச்சாவு அடைந்தவரிடம் கிடைத்த 2 சவ்வுகளை டாக்டர்கள் வாங்கினர். மூன்றாவது சவ்வை அவருடைய தாயின் காலில் இருந்து எடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மூட்டு உள்நோக்கி கருவி சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் தலைமையிலான குழுவினர் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஐசக்கின் இடது முட்டியில் உள்ளே கிழிந்து இருந்த 3 சவ்வுகளுக்கு பதிலாக தானமாக கிடைத்த 3 சவ்வுகளை வெற்றிகரமாக பொருத்தினர்.
இதுபற்றி மூட்டு உள்நோக்கி கருவி சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவர் மற்றும் உயிரோடு இருப்பவரிடம் இருந்து சவ்வுகளை எடுத்து பொருத்தி சாதனைப் படைத்துள்ளோம். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு சுமார் ரூ.4 லட்சம் செலவாகும். தற்போது ஐசக் நலமாக இருக்கிறார்.
இவ்வாறு டாக்டர் ஜி.லியோனர்ட் பொன்ராஜ் கூறினார்.