Published : 05 May 2016 09:17 AM
Last Updated : 05 May 2016 09:17 AM

சோனியா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடியா? - தமிழக அதிகாரிகள் இடையூறு செய்வதாக காங்கிரஸார் புகார்

திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட் டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார். அவருடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக தீவுத்திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார், தமிழக போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

சோனியா பேசவிருக்கும் மேடை, தமிழக அரசின் தலைமைச் செயலகம் போன்று வடிவமைக்கப்படுகிறது. அதன் முகப்பில் அமைக்கப்படும் முக்கோண வடிவத்தை அகற்ற வேண்டும். மேடையில் மிக உயரத்தில் இந்த முக்கோண வடிவம் அமைக்கப்படுவதால் காற்றில் கீழே விழ வாய்ப்பு உள்ளது. மேலும், மேடை உச்சியில் அதிக பளுவை ஏற்றக்கூடாது என மேடை வடிவமைப்பாளர் மற்றும் காங்கிரஸாரிடம் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘அந்த முக்கோண முகப்பு வடிவம் இல்லையெனில் இந்த மேடைக்கே உயிரோட்டம் இல்லாமல் போய்விடும். தலைமைச் செயலகம் என்ற வடிவம் அந்த முக்கோண முகப்பு இல்லாமல் நிறைவு பெறாது’ எனக் கூறி காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தெர்மோகூல், பிளக்ஸ் துணி கொண்டு அதிக பளு இல்லாமல் முக்கோண முகப்பு வடிவம் அமைப்பதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் காங்கிரஸார் சமாதானம் செய்தனர்.

அதேபோல, ‘பார்வையாளர் கள் அமரும் பகுதியில் தடுப்புகளை நாங்கள் கூறியபடி போதிய இடைவெளிவிட்டு அமைக்கவில்லை. மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள தகரத்தினால் ஆன தடுப்புகளில் 2 இடங்களில் கதவு அமைத்து திறப்பு அமைக்க வேண்டும் என தெரிவித்தோம். அதையும் செய்யவில்லை. தலைவர்கள் வரும் வழியில் சாலையை இன்னமும் செப்பனிடவில்லை. மேடையில் தனியாக கழிப்பறை அமைக்கவில்லை. கழிப்பறைக்கு பதிலாக கேரவன் வேன் கொண்டு வந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். அது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல’ என தமிழக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் காங்கிரஸாரோ, ‘கடந்த 2011-ல் சோனியா, கருணாநிதி ஆகியோர் இதே தீவுத்திடலில் ஒரே மேடையில் பேசியபோது என்ன ஏற்பாடுகளை செய்தோமோ அதே ஏற்பாடுகளைத்தான் இப்போதும் செய்து வருகிறோம். மேலும், மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படை போலீஸார் அறிவுறுத்தியபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தமிழக அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே தேவையற்ற இடையூறுகளை செய்து வருகின்றனர்’ என குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, பொதுக்கூட்ட மேடையை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்று பார்வையிட்டார். விமான நிலையத்தில் இருந்து தீவுத்திடலுக்கு சோனியா வந்து செல்லும் பாதையில் போலீஸார் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x