Published : 10 May 2022 04:05 PM
Last Updated : 10 May 2022 04:05 PM

'நீட்டை ஆதரிக்கும் பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்' - கே.எஸ்.அழகிரி

கேஎஸ் அழகிரி | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிற, நீட்டை ஆதரிக்கிற பாஜக-வை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் இந்தி மொழி திணிப்பு குறித்துப் பேசியிருக்கிறார். இந்தியைப் படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறியதன் மூலம் தமிழர்களின் உணர்வை அவர் புண்படுத்தியிருக்கிறார். இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். நேருவின் உறுதிமொழியால் பெற்ற சட்டப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் பாஜக செயல்பட விரும்புகிறது. பாஜக ஆட்சியைப் பொருத்தவரை இந்தி திணிப்பு தொடர் கதையாக நடந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்தியைத் திணித்தார்கள். கடுமையாக எதிர்த்த காரணத்தினால் விலக்கிக் கொண்டார்கள். சமீபத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் சுற்றறிக்கையின் மூலம் அங்கு நடைபெறும் அலுவல் நடைமுறை ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியில் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இதை அனைத்து கட்சிகளும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ரயில்வே, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வடமாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள்.

இதன்மூலம் தமிழகத்திற்கு விரோதமாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு கொண்டார்களா? அல்லது வெளிநாட்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களா? என்று நிர்மலா சீதாராமன் விநோதமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். கரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரே ஒரு தடுப்பூசியைக் கூட மத்திய அரசின் பொதுத்துறை சார்பாக தயாரிக்க வக்கற்ற பாஜக அரசு இந்தக் கேள்வியை எழுப்ப எந்த உரிமையும் இல்லை. மத்திய பாஜக அரசின் பாரபட்சமான தடுப்பூசி கொள்கையை எதிர்த்தோமே தவிர தடுப்பூசியை எதிர்க்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர். இந்தியாவின் வளர்ச்சிக்கு 60 ஆண்டுகளில் அடித்தளமிட்டு உலக அரங்கில் வல்லரசாக உயர்த்திய பெருமை காங்கிரஸ் ஆட்சிக்குத்தான் உண்டு என்பதை 8 ஆண்டுகால மோடி ஆட்சியினர் மூடி மறைத்துவிட முடியாது. 8 ஆண்டுகால சாதனைகளைச் சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாஜக தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூலித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. மாநில அரசுகளுக்கு பங்கு கொடுக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி விதித்து வருவாயை முழுமையாக எடுத்துக் கொண்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை ஏறத்தாழ 20 ஆயிரத்து 860 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதை வழங்காமல் தமிழகத்தின் மீது நிதியமைச்சர் பழி சுமத்துவது கண்டனத்திற்கு உரியது.

9வது, 10வது நிதிக்குழுவில் 60 பைசா வழங்கிய நிலையிலிருந்து தற்போது 15வது நிதிக்குழு பரிந்துரையின் மூலம் 35 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அரசுகளின் நிதி ஆதாரம் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக வழங்கவேண்டிய தொகை ரூபாய் 7,899 கோடி. மொத்த ஊராட்சிகள் 12,525. இதில் 2,090 ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தவில்லை என்று மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டது. கடந்த அக்டோபர் 9ம் தேதி இதற்குரிய தேர்தலும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் மானியத் தொகையை விடுவிக்க நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை. இதைவிட பாரபட்சமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

மத்திய பாஜக ஆட்சியில் பொருளாதாரப் பேரழிவு நிகழ்ந்து வருகிறது. உற்பத்தி குறைவு, வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து ரூபாய் 77.41க வீழ்ச்சி அடைந்துள்ளது. மோடி ஆட்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூவில் உள்ளது. இதன்மூலம் நிதியமைச்சர் நிதி மேலாண்மையில் படுதோல்வி அடைந்துள்ளார். அதேபோல், எல்ஐசி பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விற்பனை மூலம் அரசுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இதனால் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ரூபாய் 26 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்துள்ளது. எல்ஐசி பங்குகளைக் குறைந்த விலையில் விற்றதே இந்த நஷ்டத்திற்குக் காரணம். நேரு வளர்த்தெடுத்த இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்து மக்கள் சொத்தைச் சூறையாடுகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லுலு மால்கள் தொடங்குவதை கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது அவருக்கு இயல்பாக இருக்கிறது. காங்கிரசையும் திமுக-வையும் அழிகிற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். கடந்த மக்களவை, சட்டமன்ற, ஊரக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் மக்கள் பேராதரவோடு திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதையும், பாஜக படுதோல்வி அடைந்ததையும் மூடிமறைத்து அண்ணாமலை பேசுகிறார். தோல்வியிலிருந்து பாஜக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிற, நீட்டை ஆதரிக்கிற பாஜகவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்."என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x