வட்டி அதிகரிப்பு பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது; குறு சிறு தொழில்களைப் பாதிக்கும்: எம்.பி. சு.வெங்கடேசன் 

வட்டி அதிகரிப்பு பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது; குறு சிறு தொழில்களைப் பாதிக்கும்: எம்.பி. சு.வெங்கடேசன் 
Updated on
2 min read

சென்னை: ரிசர்வ் வங்கியின் 2021 - 22 க்கான கரன்சி மற்றும் நிதி அறிக்கை, கரோனா பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறது. இந்தச் சூழலில் ரிப்போ விகிதம், சிஆர்ஆர் விகித உயர்வுகள் மேலும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ரிசர்வ் வங்கி அண்மையில் வணிக வங்கிகளுக்கு வழங்குகிற கடனுக்கான வட்டி விகிதத்தை (REPO rate) 0.40 % மற்றும் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தை (CRR) 0.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த முடிவு சாமானிய மக்களுக்கும், சிறு வணிகர்களுக்கும், குறு சிறு தொழில்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த முடிவு மக்களின் வாழ்வை மிகக் கடுமையாக பாதிக்கும். மக்கள் கைகளில் புழங்குகிற பணத்தை குறைத்து வாங்கும் சக்தியையும் காயப்படுத்திவிடும். இந்த முடிவு வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன்களின் மாதத் தவணைகளை கணிசமாக உயர்த்தி சமுகத்தின் நடுத்தர, ஏழை பகுதியினரை கடுமையாக பாதிக்கவுள்ளது.

நமது தேசம் கடும் பண வீக்கத்தில் சிக்கித் தத்தளிக்கிறது. ஆண்டு பண வீக்கம் 17 மாதங்கள் இல்லாத அளவிற்கு 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலை பண வீக்கம் 14.5 சதவீதம் என்ற அளவைத் தொட்டுள்ளது. இவை மக்களின் மீது பெரும் சுமைகளை ஏற்றியுள்ளன. இது தவிர வேலை இழப்புகள், வருமானம் மீதான தாக்குதல்கள் பேரவலமாக மாறியுள்ளன. நவீன தாராளமயத்தின் சீரழிவை, கரோனா பெருந்தொற்று இன்னும் ஆழப்படுத்தி உள்ளது. இதற்கான தீர்வுகள் வட்டி விகித மாற்றங்களில் இல்லை. மாறாக மாற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மொத்த விலைப் பண வீக்கத்தின் ஒரு அங்கமான எரிபொருள், மின்சாரம் என்பவை மட்டும் 34.5 சதவீத பண வீக்கத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறது. இது அரசு வரி விதிப்பு கொள்கையின் விளைவே ஆகும். இன்னொரு முக்கியமான ஒன்று உணவுப் பொருள் பண வீக்கம். மார்ச் 2022 வரையிலான ஓராண்டு காலத்தில் கிராமப்புற உணவு விலைகள் இரண்டு மடங்குகள் உயர்ந்துள்ளன. இது தேசிய புள்ளி விவர அலுவலகம் தந்துள்ள அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு பற்றிய தகவல் ஆகும். இந்த விகித அதிகரிப்புகள் ரூ 87000 கோடி நீர்மத்தை சந்தையில் இருந்து உறிஞ்சி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் இது பண வீக்கத்திற்கு தீர்வு காண உதவாது. மாறாக இது பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும். சாதாரண நடுத்தர மக்கள் கைகளில் புழங்குகிற கொஞ்ச நஞ்ச பணத்தையும் உறிஞ்சி விடும்.

சிறு தொழில் முனைவோர், சிறு தொழில் அமைப்புகள் பல ரிசர்வ் வங்கியின் முடிவு குறித்த கவலைகளை தெரிவித்துள்ளனர். அவர்களின் கவலைகளில் நியாயம் உள்ளது. இது கடனுக்கான வட்டியையும், கச்சா பொருட்கள் விலையையும் கடுமையாக உயர்த்தி விடும். ரிசர்வ் வங்கியின் முடிவு நுகர்வை பாதித்து கிராக்கியை குறைத்து விடும். இன்னும் கரோனா பாதிப்பில் இருந்தே நாட்டின் பொருளாதாரம் மீளாத நேரம் இது.

ரிசர்வ் வங்கியின் "2021 - 22 க்கான கரன்சி மற்றும் நிதி" அறிக்கை கூறுவது என்ன? கரோனா பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு 12 ஆண்டுகள் எடுக்கும் என்கிறது. இந்த சூழலில் ரிப்போ விகிதம், சிஆர்ஆர் விகித உயர்வுகள் மேலும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும். இந்த சூழலில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கவும், குறு சிறு தொழில்களின் எதிர்காலம் உறுதி செய்யப்படவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

குறு சிறு தொழில்களுக்கு சலுகை வட்டியில் கடன் அளித்திடுவதையும், குறு சிறு தொழில்களுக்கான கடன் இலக்குகளை வங்கிகள் நிறைவு செய்வதையும், ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான செலவினங்களை நகரம் கிராமம் இரண்டிலும் உயர்த்தவும், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்ட ஒதுக்கீடுகளை அதிகரிக்கவும் திட்டவட்டமான முடிவுகளை எடுக்குமாறும் வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in