Published : 10 May 2022 07:35 AM
Last Updated : 10 May 2022 07:35 AM

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்கலாம்: அரசுக்கு வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை

தஞ்சாவூர்: நிகழாண்டு டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்கலாம் என தமிழக அரசுக்கு மூத்த வேளாண் வல்லுநர் குழு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக வேளாண் துறையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த வேளாண் வல்லுநர்கள் இணைந்து, கடந்த 16 ஆண்டுகளாக ‘பயிர் சாகுபடியும் - மேட்டூர் அணை நீர் வழங்கல் திட்டமும்' என்ற அறிக்கையைத் தயாரித்து, தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர். அதேபோல, நிகழாண்டும் இக்குழு அறிக்கை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, தஞ்சாவூரில் நேற்று மூத்த வேளாண் வல்லுநர் குழுவைச் சேர்ந்த பி.கலைவாணன், வி.கலியமூர்த்தி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு மேட்டூரில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டாலும், ஜூலை மாதம் நாற்றுவிட்டதால், அக்டோபர் மழையில் அறுவடை நேரத்தின்போது பயிர்கள் வீணாகின. இதைத் தவிர்க்க குறுவை சாகுபடிக்காக நாற்றுவிடுவது, நேரடி விதைப்பு போன்ற பணிகளை விவசாயிகள் மே முதல் ஜூன் 30-ம் தேதிக்குள்ளாக தொடங்க வேண்டும்.

சம்பாவில் நீண்ட கால ரக நெற்பயிர்களை ஆக.15 முதல் செப்.7-க்குள்ளாகவும், சம்பா மற்றும் தாளடியில் மத்திய கால ரக நெற்பயிர்களை செப்டம்பர் முழுவதும் நாற்று விடுவது, நேரடி நெல் விதைப்பு போன்றவற்றை விவசாயிகள் மேற்கொண்டால், மழை நேரங்களில் பயிர்கள் வீணாகாமல் இருக்கும். நேரடி விதைப்பு, நிலத்தடி நீர், மழையை முறையாக பயன்படுத்தலாம். நிகழாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதுமான அளவு மழை பெய்யும் என வானிலை அறிக்கை கூறுகிறது. இதனால், ஜூன் 2-வது வாரம் வரை மேட்டூரில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருக்கும். எனவே, டெல்டாவில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை அரசு திறக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x