Published : 10 May 2022 06:26 AM
Last Updated : 10 May 2022 06:26 AM

சேலத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எட்டு வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள்.படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிடக்கோரி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்க விவசாயிகள் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டியக்கத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். குப்பனூர் ஊராட்சித் துணைத் தலைவர் செல்வராஜூ முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டில்லி பாபு, மாவட்டச் செயலாளர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், பொன்னுசாமி, சந்திரமோகன் உள்ளிட்ட விவசாய அமைப்பு நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டில்லி பாபு கூறியதாவது:

சென்னை- சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, எட்டுவழிச் சாலை திட்டம் கைவிடப்பட்டது.

அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்தால், எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என கூறியது. மேலும், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களின்போது, எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதிகளை அளித்தது. இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

இத்திட்டத்துக்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில், அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, திமுக ஆட்சியில் எக்காரணம் கொண்டும் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட மாட்டாது என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x