Published : 10 May 2022 05:48 AM
Last Updated : 10 May 2022 05:48 AM

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து ஆர்.ஏ.புரத்தில் 2-வது நாளாக போராட்டம்: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தலைவர்கள் ஆறுதல்

ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்ணையன் என்ற முதியவர் தீக்குளித்து உயிரிழந்தார். இவர் பாமக நிர்வாகி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 2-வது நாளாக அப்பகுதி மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். கறுப்பு பட்டை அணிந்தும், சாலையோரம் உணவு சமைத்தும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். பின்னர், இடிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்ததோடு உயிரிழந்த கண்ணையன் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்தக் குடியிருப்பு பகுதி நீர்நிலை புறம்போக்கு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொதுப் பணித்துறை அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் முதலாளிகளும் இணைந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.

இடிக்கப்பட்ட அதே இடத்தில் புதிய குடியிருப்பை அரசே கட்டித்தர வேண்டும். இதனை செய்யவில்லை எனில், ரியல் எஸ்டேட் முதலாளிகள் கட்டி வைத்துள்ள புதிய அப்பார்ட்மெண்ட்டுகளில் பாதிக்கப்பட்ட மக்களை குடியேற்றுவோம். அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெண்ணிடம் விசாரித்தார்.

பணக்காரர்கள் வசதியாக குடியிருக்க, ஏழை மக்களின் குடியிருப்புகளை இடிப்பதை ஏற்க முடியாது. கண்ணையன் தீக்குளித்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது கொலை அல்லது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். முதல்வர் இந்த பகுதியை பார்வையிட்டு, தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதேபோல், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.நடராஜ், பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராயன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

நீதிபதிகளிடம் முறையீடு

இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வாஸ் ஆஜராகி முறையீடு செய்தார். அதில், தற்போது தேர்வுகள் நடைபெறும் நேரம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை இன்று (மே 10) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x