Published : 10 May 2022 06:02 AM
Last Updated : 10 May 2022 06:02 AM

சென்னை ராயபுரம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.285 கோடியில் புதுப்பொலிவு பெறும் பொதுக் கழிப்பறைகள்: உலகத் தரத்தில் தூய்மையைப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ராயபுரம், திரு.வி.க.நகர் தேனாம்பேட்டை மண்டலங்களில் ரூ.285 கோடியில் பொதுக் கழிப்பறைகளை உலகத் தரத்தில் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களும், அவற்றில் 200 வார்டுகளும் உள்ளன. தினமும் ஒரு கோடி பேருக்கும் மேல் வந்து செல்லும் பகுதியாக சென்னை உள்ளது.

எனினும், அதற்கேற்ப மாநகராட்சி பொதுக் கழிப்பறைகள் அமைக்கப்படவில்லை, இருக்கும் கழிப்பறைகளும் போதிய பராமரிப்பின்றி உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், மாதிரி திட்டமாக சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் 3 மண்டலங்களில் உள்ள கழிப்பறைகளைச் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகரம் தமிழகத்தின் முகமாகப் பார்க்கப்படுகிறது. இங்குள்ள வசதிகள், தூய்மை அடிப்படையில் தமிழகத்தை சுற்றுலாப் பயணிகளும், அரசியல்வாதிகளும், வெளி மாநில உயரதிகாரிகளும் மதிப்பிடுகின்றனர்.

மாநகராட்சி சார்பில் தற்போது 816 இடங்களில் 7,247 இருக்கைகளுடன் பொதுக் கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்தந்த மண்டலங்கள் சார்பில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மெரினா கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்கு மக்கள் அதிகம் வருகின்றனர்.

ராயபுரம் மண்டலம் வணிக ரீதியான பகுதியாக உள்ளது. அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், பிராட்வே பேருந்து முனையம், அரசு பொது மருத்துவமனை, நேரு விளையாட்டு அரங்கம், ரிப்பன் மாளிகை, அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவை இந்த மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

இதை ஒட்டி அமைந்துள்ள திரு.வி.க.நகர் மண்டலத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 2-ம் நிலை அரசு அலுவலகங்களும், பெரம்பூர் ரயில் நிலையம் உள்ளிட்டவையும் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளன.

தேனாம்பேட்டை மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மெரினா கடற்கரை, தினமும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளை உலகத் தரத்தில் சீரமைத்து, பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தப் பகுதிகளில் 252 இடங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இப்பகுதிகளில் 2,642 இருக்கைகளுடன் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 42 இடங்களில் 519 இருக்கைகளைக் கொண்ட கழிப்பறைகள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட உள்ளன. 18 இடங்களில் கூடுதலாக 108 இருக்கைகளுடன் கழிப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. 192 இடங்களில் உள்ள கழிப்பறைகளில் 1,997 இருக்கைகள் பழுதுபார்க்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் மற்றும் 8 ஆண்டு பராமரிப்பு பணிகள் ஆகியவை மொத்தம் ரூ.285 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் சிசிடிவி கேமரா நிறுவுதல், மக்களின் கருத்துகளைக் கேட்டறிதல், பணியாளர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு உள்ளிட்டவையும் இடம்பெறும். இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள கழிப்பறைகள் உலகத் தரத்தில் மேம்பாடு அடையும்.

இதன் மூலம் பயன்களை அடிப்படையாகக் கொண்டு, இதர மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x