Published : 10 May 2022 06:29 AM
Last Updated : 10 May 2022 06:29 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலோர மீன் வளர்ப்பு ஆணையம் சார்பில் யோகா உற்சவம் நடைபெற்றது.
இதில், மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது, இறால் பண்ணை உற்பத்தியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் யோகா பயிற்சி மேற்கொண்டார். யோகாசனங்கள் அதற்கான பலன்கள் குறித்து விளக்கியவாறு யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிகழ்ச்சியில் பேசியதாவது: ஆண்டுதோறும் யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அவசரவாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் என மொத்தமாக வாழ்க்கை முறை மாறிக் கொண்டிருக்கிறது. அதனால், நமது ஆரோக்கியத்தை பேணுவதற்கு யோகா முக்கிய கலையாக இருக்கிறது. சிறப்பு வாய்ந்த கடற்கரை கோயில் வளாகத்தில் யோகா உற்சவம் தொடங்கியிருப்பது பெருமை வாய்ந்தது. சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு 75 நாட்களுக்கு முன்பாக நாம் தொடங்கியுள்ளோம் என்றார். இதையடுத்து, இறால் பண்ணை உற்பத்தியாளர்கள் சார்பில் மத்திய இணை அமைச்சருக்கு நினைவுப் பரிசாக மீன் சிற்பம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,கடலோர மீன் வளர்ப்பு ஆணைய தலைவர் அமர்சிங் சவுகான், ஆணைய இயக்குநர் அந்தோணி சேவியர், உறுப்பினர் செயலர் கிருபா, மீன்வளத் துறை ஆணையர் பழனிச்சாமி, கால்நடை மற்றும் மீன்வளத் துறை கூடுதல் செயலர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT