

கொடைக்கானல்: தமிழகத்தின் முக்கியமான சுற்று லாத்தலமான கொடைக்கான லில், மாவட்ட சுற்றுலா அலுவலர் பணியிடம் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலகம் கொடைக்கானலில் உள்ளது. ஒரு மாவட்ட சுற்றுலா அலுவலர், 2 உதவி சுற்றுலா அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர் பணியிடங்கள் இந்த அலுவலகத்தில் உள்ளன. முதன்மை பணியிடமான மாவட்ட சுற்றுலா அலுவலர் பணியிடம் 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலருக்கு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.
உதகமண்டலத்துக்கு அடுத்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் கொடைக்கானல். ஆனால் சுற்றுலா அதிகாரிகள் இல்லாததால் சுற்றுலாத்துறை மூலம் கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலுக்கு எந்த திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பொறுப்பு அலுவலரைக் கொண்டே திண்டுக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது. மதுரை மாவட்ட சுற்றுலாப் பணிகளையும் கவனித்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா பணிகளையும் கவனிப்பது சிரமமான காரியம்.
இந்நிலை இங்கு மட்டுமல்ல, விருதுநகர் மாவட்ட சுற்றுலா அலுவலர், கூடுதலாக தேனி மாவட்ட சுற்றுலா அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதே நிலைதான் பல மாவட்டங்களில் உள்ளது. கொடைக்கானலில் சுற்றுலாத்துறையின் செயல்பாடு கள் பின்தங்குவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட சுற்றுலா அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.