

மதுரை: ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறினார்.
மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை தமிழகமே உற்று நோக்குகிறது. பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் இவ்வளவு விரைவில் அனுமதி தருவார் என எதிர்பார்க்கவில்லை. ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
பட்டினப் பிரவேசம் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உல கறியச் செய்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைச்சர்கள் குறித்து மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார், இனிமேல் அப்படி அவர் சொல்ல மாட்டார்.
பாஜக, இந்து அமைப்புகளின் குரலாக நான் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள். முந்தைய மதுரை ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின்போது அவரவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்படி யாருக்கும் எனது ஆதரவு கிடையாது.
ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத் துறை அதிகாரிகளே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது குறித்து தமிழக அரசுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசன கட்டண நடைமுறையை அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.