Published : 07 May 2016 12:47 PM
Last Updated : 07 May 2016 12:47 PM

மீனவர்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மீனவர் நலனில் அக்கறையின்றி செயல்பட்டது அதிமுக அரசு என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரத்தில் மமக வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் நேற்று பேசியதாவது:

2006-ம் ஆண்டு கருணாநிதி ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். இதற்கு முன் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கும் மூடுவிழா கண்டார். கிருஷ்ணகிரி-தருமபுரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.2 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டங்களை முறையாகப் பராமரிக்காமல் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் செய்துவிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்கச் செய்வோம்.

கமுதியில் ரூ.5,436 கோடியில் சூரிய ஒளி மின்திட்டத்துக்கு அதிமுக அரசு அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரம் ரூ. 5.40-க்கு வாங்கப்படுகிறது. ஆனால் இங்கு ரூ.7.01-க்கு வாங்குகின்றனர். இதனால் மின்வாரியத்துக்கு ரூ.23 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

110 விதியின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 ஆயிரம் ஏக்கரில் தொழிற்பூங்கா, ரூ.6,525 கோடியில் தேசிய முதலீட்டு உற்பத்தி மண்டலம், ரூ.1,500 கோடியில் சூரிய ஒளி மூலம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரம்-தூத்துக்குடி, ராமநாதபுரம்-திருச்சி சாலைகள் நான்குவழிச் சாலை என ஜெயலலிதா அறிவித்தார். இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

2011 முதல் 2015 வரை 2,024 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 400-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிமுக எம்பி க்கள் நாடாளுமன்றத்தில் பேசவில்லை. முதல்வர் கடிதம் மட்டும் எழுதுவார். இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட இந்த அரசு முட்டுக்கட்டை போட்டது. மீனவர்களின் நலனில் அக்கறையில்லாத அரசு.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப் பட்டினம் மீனவர்களை இலங்கை ராணுவத்தின் அடாவடித்தனத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர் ப்போம்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி, முதுகுளத்தூரில் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, பரமக்குடிக்கு பாதாளச் சாக்கடை திட்டம், தனுஷ்கோடி புது சாலையில் தூண்டில்முள் வளைவுத் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவோம். ராமநாதபுரம்-தூத்துக்குடி, ராமநாதபுரம்-திருச்சி சாலைகள் நான்குவழிச் சாலைகளாக மாற்றப்படும் என்றார்.

ராகத்துடன் பாடிய ஸ்டாலின்

சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு நேற்று இரவு நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களைப் பற்றி சிந்திக்காத ஒரே முதல்வர் ஜெயலலிதா. அவரைப் பற்றி நினைக்கும்போது எனக்கு ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது. “ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன, தேடிய செல்வம் என்ன” என்ற இந்தப் பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன்.

அவரை ஈன்றெடுத்த மண் சிவகங்கை மாவட்டம். அவர் எழுதிய இந்த வரிகள் முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதாவுக்கு பொருந்தும். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சத்தியம் தவறாத உத்தமி போலவே நடிக்கிறார், பல கொள்ளையும் அடிக்கிறார் என்ற எம்ஜிஆர் பாடலைப் பாடி கூட்டத்தை நிறைவு செய்தார்.

ஸ்டாலின் ராகம் போட்டு பாடியபோது மக்கள் ஆரவாரத்தில் கைதட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x