Published : 03 May 2016 04:20 PM
Last Updated : 03 May 2016 04:20 PM

பணம் கொடுத்தால்தான் அதிமுகவினருக்கும் அரசு வேலை: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

`அதிமுகவினருக்கு கூட பணம் கொடுத்தால்தான் அரசு வேலை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது’ என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் புகார் கூறினார்.

கட்சியின் மூத்த தலைவரான டி.மணி 4-வது நினைவுதின பொதுக்கூட்டம் மற்றும் மே தினவிழா மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

பலமுறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய டி.மணியும், அவரது மூத்த சகோதரர் ஜி.எஸ்.மணியும் ஆற்றிய பணிகள், அவர்கள் செய்த தியாகத்தை பற்றி மணிக் கணக்கிலே பேச முடியும். அவர்கள் சிந்திய ரத்தம் என்பது இந்த மண்ணை சிவப்பாக்கியது மட்டுமல்ல, விடுதலைக்கு இட்டுச்சென்றது. மக்களுக்காக போராடுவது, வாதாடுவது, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி எடுப்பது என மக்களைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது.

இரு முதல்வர்கள்

அண்ணா மறைவுக்கு பிறகு 10 சட்டப்பேரவைத் தேர்தல்களை தமிழகம் சந்தித்தது. கருணாநிதி 5 முறையும், ஜெயலலிதா 3 முறையும் ஆட்சி செய்தனர். இருவருமே மக்களை மறந்தார்கள். தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள்.

கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் என்ன நடைபெறுகிறது? ஆளுங்கட்சிக் காரர்களாகவே இருந்தாலும், போக்குவரத்து துறையில் கண்டக்டர் வேலைக்கு ரூ. 4 லட்சம், ஓட்டுநர் வேலைக்கு ரூ. 4 லட்சம், மெக்கானிக் வேலைக்கு ரூ. 7 லட்சம், விஏஓ வேலைக்கு ரூ. 2 லட்சம், கல்லூரி பேராசிரியர் வேலைக்கு ரூ. 60 லட்சம், துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி என நீளத்துக்கு பட்டியல் போட்டு ஒட்டப்பட்டிருக்கிறது.

இதுபோல், 5 முறை முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார், மகள், இரண்டு பேரன்கள், அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோர் மீது ஊழல் வழக்கு உள்ளது. ஊழல் செய்வதில் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

எதிரிகள் அல்ல

வெளிப்படையாகப் பார்த்தால் திமுக, அதிமுகவினர் எதிரிகள் போல் உள்ளனர். எலியும் பூனையுமாக இருக்கும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மணல் கொள்ளையில் கமிஷன் பெற்றுத்தர ஒரு ஆளையே வைத்துள்ளனர். அதில் அவர்களுக் குள் எந்த மோதலும் இல்லை.

கிரானைட் கொள்ளை

மதுரை கிரானைட் கொள்ளை குறித்து, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது அறிக்கையில், இந்த முறைகேடு கடந்த 22 ஆண்டுகளாக நடைபெறுள்ளது என கூறியுள்ளார். இந்த 22 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் கருணாநிதியும், அடுத்த 10 ஆண்டு கள் ஜெயலலிதாவும் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் இருவரும் மாறி மாறி, கிரானைட் முறைகேட்டுக்கு எதிராக தாங் கள்தான் நடவடிக்கை எடுத்தோம் என பொய் சொல்கிறார்கள்.

தொழில் பாதிப்பு

கச்சா ரப்பர் இறக்குமதி செய்வதால் இன்று உள்நாட்டு ரப்பர் கிலோ 120 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதுபோல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது முந்திரி ஆலைத்தொழில். மத்திய அரசு கச்சா முந்திரி இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதால், இத்தொழில் கடும் நசிவை சந்தித்துள்ளது. குமரி மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதை தடுக்க வேண்டாமா? தொழிலை பாதுகாக்க வேண்டாமா?

தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தமாகா ஆட்சியில் குமரி மாவட் டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. கூட்டணி ஆட்சி அமையப்போகிறது என அவர் கூறினார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர் லீமாறோஸ், முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x