அடுக்கப்பட்ட கேள்விகள் - கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் போலீஸார் விசாரணை
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னரே கைதாகி தற்போது பிணையில் வெளியே உள்ள சயானிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது.
இதற்காக கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இத்தனிப்படை போலீஸார், கொள்ளை வழக்கில் முன்னரே கைதானவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், எஸ்டேட் பற்றி அறிந்தவர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளாவை பூர்வீகமாக கொண்டவரும், சேலத்தில் வசித்து வந்தவருமான சயானையும் போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், இவர் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், தனிப்படை போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு சம்மன் அனுப்பினர். அதனடிப்படையில், சயான் இன்று (மே 9) மதியம் கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் கோடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு போலீஸார் விசாரித்தனர். கொள்ளை சம்பவத்துக்கு திட்டமிட்டு கொடுத்தது யார், உயிரிழந்த கனகராஜூடன் எவ்வாறு அறிமுகம் ஏற்பட்டது, கொள்ளை சம்பவம் தொடர்பாகவும், அதை நிறைவேற்ற கூறியவர்கள் தொடர்பாக கனகராஜ் ஏதாவது கூறினாரா, இவ்வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது, அல்லது தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் யார்? இதில் அரசியல் பிரமுகர்கள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது போன்ற கேள்விகளை கேட்டு சயானிடம் விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸார் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறும்போது, ''கோடநாடு சம்பவம் தொடர்பாக சயானிடம் விசாரணை நடத்தப்பட்டது,'' என்றார்.
