Published : 14 May 2016 07:49 PM
Last Updated : 14 May 2016 07:49 PM

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்றே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே கச்சத்தீவில் புதிய தேவாலயத்தை கட்ட வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், ''கச்சத்தீவில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியர் தேவாலயத்தை இடித்துவிட்டு, இலங்கை அரசு புதிய தேவாலயம் கட்ட உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தோணியர் தேவாலயமானது தமிழக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மீனவர்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றாண்டுகளாக புனித அந்தோணியர் தேவாலய திருவிழாவில் பங்கேற்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, தேவாலயத்தை இடித்து, மீண்டும் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை அங்குள்ள பாதிரியார்கள் முன்வைத்தனர்.

அதற்கு தமிழக மீனவர்கள், “அந்தோணியர் தேவாலயமானது தமிழகம், இலங்கை மீனவர்களின் பாரம்பரிய தலமாக உள்ளது. எனவே, இரு தரப்பினரும் சேர்ந்துதான் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போது தமிழக மீனவர்களை கேட்காமல் தேவாலயத்தை இடித்து புதிதாக தேவாலயம் கட்ட இலங்கை அரசு ஒருதலைபட்சமாக முடிவு செய்துள்ளது திட்டமிட்ட செயலாக தோன்றுகிறது.

அவ்வாறு, ஒருதலைபட்சமாக தேவாலயத்தை இடித்து மீண்டும் கட்டினால், பாரம்பரியமாக தாங்கள் அங்கு சென்று வழிபடுவது எதிர்காலத்தில் தடுக்கப்படலாம் என தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இலங்கை அரசின் தன்னிச்சையான இந்த செயலை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், இந்த பிரச்சினையில் தொடர்புடைய தமிழக மீனவர்களுடன் இலங்கை அரசு கலந்து பேசி, அதன் பின்னரே இப்பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாக சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். பிரதமர் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x