Published : 09 May 2022 01:09 PM
Last Updated : 09 May 2022 01:09 PM

பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், பருத்தி மற்றும் பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்களாகவும் அறிவித்து மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கைத்தறி, விசைத்தறி, ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட துணி சார்ந்த அனைத்து தொழில்களையும் பாதிக்கும் பருத்தி நூல் விலை உயர்வு தொடர் கதையாகி வருவது கவலையளிக்கிறது. பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், இப்போக்கு தொடர்வது ஐயத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பருத்தி நூல் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில், பருத்தி நூல் மீதான 10% இறக்குமதி வரியை கடந்த ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதன் காரணமாக பருத்தி நூல் விலை குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நூல் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்திருப்பது துணித்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட விலை உயர்வையும் சேர்த்து 40ம் எண் நூலின் விலை கிலோ ரூ.463.81 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் விலையான ரூ.226.16 விட 102 % அதிகம் ஆகும். 10ம் எண், 16ம் எண், 20ம் எண், 25ம் எண், 30ம் எண், 34ம் எண் என அனைத்து வகையான நூல் விலைகளும் கிட்டத்தட்ட இதே அளவில் அதிகரித்திருக்கின்றன. இது துணித் தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது.

ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், விசைத்தறி உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இத்துறைகளின் மூலம் நாட்டிற்கு மிக அதிக அளவில் அந்நிய செலாவணி கிடைக்கிறது. ஆனால், பருத்தி நூல் விலை உயர்வு இந்த தொழில்கள் அனைத்தையும் சிதைத்து விடும். உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகச் சூழல், எரிபொருட்கள் விலை உயர்வால் அதிகரித்துள்ள சரக்குக் கட்டணம், தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆயத்த ஆடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு முன்பாக பெறப்பட்ட ஆர்டர்களை, முன்பு ஒப்புக்கொண்ட விலையில் முடித்துக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆயத்த ஆடை நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆயத்த ஆடை நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டால், அது அவற்றை நம்பியுள்ள துணைத் தொழில்களை கடுமையாக பாதிக்கும். அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், மிகப்பெரிய அளவில் வேலை இழப்பும், பொருளாதார பின்னடைவும் ஏற்படும். அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் பின்னலாடை தொழிலும், விசைத்தறிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படும். பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தால் அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் மோசமானதாக இருக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நூல் விலையை கட்டுப்படுத்தி, பின்னலாடை மற்றும் விசைத்தறி தொழில்துறைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.

இந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்களும், பருத்திப் பஞ்சும் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தான் நூல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் ஆகும். இன்னொருபுறம் பருத்தி நூல்கள் பதுக்கப்படுவது நிலைமை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.

பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நூல் இழைகளை முழுமையாக சந்தைக்கு கொண்டு வருவது, பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளிக்கொண்டு வருவது ஆகியவற்றை சாதிக்க முடியும். எனவே, பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், பருத்தி மற்றும் பருத்தி நூலை அத்தியாவசியப் பொருட்களாகவும் அறிவித்து மத்திய அரசு ஆணையிட வேண்டும்." என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x