Published : 09 May 2022 12:34 PM
Last Updated : 09 May 2022 12:34 PM

'முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்று செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல்' - சீமான் விமர்சனம்

சென்னை: முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்று செய்வதற்குப் பெயர்தான் திராவிட மாடல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதில் உறுதிதன்மை இல்லை. உடனே சரணடைந்து, பட்டினப்பிரவேசத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதற்கு பெயர்தான் திராவிட மாடல். முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்று செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "காலங்காலமாக போராடினோம் முடியவில்லை. ஆனால், அறிவியல் ஒரு காரை கண்டிபிடித்தது. பல்லக்கு தூக்கும் முறை செத்துவிட்டது. நவீன அறிவியல் இதுபோன்றவற்றை ஒழித்துவிட்டது. இவ்வளவு அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட பிறகு, இந்த நூற்றாண்டில் என்னை நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள் என்று கூறுவதை திருவாடுதுறை ஆதீனமே வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும்.

அதே பல்லக்கில் இருந்துகொண்டு, ஒரு மோட்டரைப் பொருத்தி இழத்துக்கொண்டு செல்லுங்கள். மக்களுக்கு வாழ்த்து கூறுங்கள், மக்களும் உங்களை பார்க்கட்டும். நீங்கள் தூக்கி சுமந்து செல்லுங்கள், அது மரபு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது.

இது காலங்காலமாக நடக்கிறது என்று கூறப்படுகிறது. காலங்காலமாக இங்கு எல்லாமே நடக்கிறது. சாதியிருக்கிறது, சாதியக் கொடுமை இருக்கிறது, மதமிருக்கிறது மதத்தின் பெயரில் நடக்கின்ற கொடுமைகள் இருக்கின்றன, வன்புணர்வு இருக்கிறது இதெல்லாம் காலங்காலமாக இருக்கிறது அனுமதியுங்கள் என்று கூறுவீர்களா.

ஒரு பண்பட்ட சமூகத்தில் பட்டினப்பிரவேசத்தை தற்போது இருக்கின்ற இளைய சமூகத்தினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை பெருந்தன்மையோடு, ஆதீனமே, ஒரு மோட்டாரைப் பொருத்தி செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதில் உறுதித்தன்மை இல்லை. உடனே சரணடைந்து, பட்டினப்பிரவேசத்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். இதற்கு பெயர்தான் திராவிட மாடல். முதல்நாள் ஒன்று சொல்லிவிட்டு அடுத்தநாள் ஒன்று செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x