Published : 09 May 2022 07:02 AM
Last Updated : 09 May 2022 07:02 AM

இலங்கை நிவாரண நிதிக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி: முதல்வரிடம் கே.எஸ்.அழகிரி வழங்கினார்

இலங்கை மக்களுக்காக ரூ.10 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன், எம்எல்ஏ-க்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ்.ராஜேஷ்குமார், எஸ்.விஜயதாரணி, ஆர்.கணேஷ் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இலங்கை நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாடும் மக்களின் நலன்காக்க, தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடியில் 500 டன் பால் பவுடர் என மொத்தம் ரூ.123 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்களை அனுப்ப, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இலங்கை நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ.1 கோடி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ரூ.50 லட்சம், காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம், தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் என பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் அறிவித்தபடி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக முதல்வர் ஸ்டாலினை, அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏ-க்கள் ஜெ.ஜெ.பிரின்ஸ் எஸ்.ராஜேஷ்குமார், எஸ்.விஜயதரணி, ஆர்.கணேஷ், காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x