Published : 09 May 2022 07:10 AM
Last Updated : 09 May 2022 07:10 AM

‘மனிதனை மனிதன் சுமப்பது’, ‘ஆன்மிக ஆட்சி’... பட்டினப் பிரவேசம் தடை நீக்கம் - ஒரு விரைவுப் பார்வை

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு ஏப்.27-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி தடை விதித்திருந்தார்.

பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் மனிதனை மனிதன் தூக்கிச் செல்வதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் சந்தித்து பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். அப்போது, கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்ததாக ஆதீனங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த தமிழக முதல்வர் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளார். அவருக்கு நமது நல்லாசிகள்.

இதேபோல, இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க முயற்சித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத் துறை ஆணையர், செயலர் உள்ளிட்ட அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகிறோம்.

ஆன்மிக மறுப்பாளர்கள் அவர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது போன்று, எங்கள் கொள்கையில் நாங்களும் உறுதியாக இருந்து வருகிறோம். மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின்பேரில் தான் சுமக்கின்றனர். இறைவன் கொடுத்த தவத்தால் கிடைப்பது இந்த பல்லக்கு. தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டினப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை, நாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்’’ என்றார்.

குழந்தையை தாய் சுமப்பதுபோல...

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியது, ‘‘பட்டினப் பிரவேசத்தில் மனிதரை மனிதர்கள் சுமக்கிறார்கள் என சிலர் குறை கூறுகின்றனர். அந்தப் புரிதல் தவறு. நாங்கள் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. குழந்தையை தாய் சுமப்பது போல, அவர்கள் தங்கள் குருவை தோளில் சுமக்கின்றனர். இந்த விஷயத்தில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூடிப் பேசி நல்ல முடிவை எடுத்துள்ளனர். இந்த பட்டினப் பிரவேசம் காலம் காலமாக தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் கூறியது:

மனிதனை பிறப்பு முதல் இறப்புவரை யாரோ சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகா சந்நிதானங்களை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவது தவறானது. பட்டினப் பிரவேசம் என்பது ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு குருமகா சந்நிதானங்கள் செல்லக்கூடிய நிகழ்ச்சி அல்ல. சிஷ்யர்கள் தங்களது குருவை தாங்கிச் செல்லக்கூடிய உற்சவம்.

இதை ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதீன சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காக அதுகுறித்து பேசவேண்டும். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக முதல்வருக்கு எனது வாழ்த்துகள். தருமபுரம் ஆதீனப் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனங்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்றார்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி நேற்று உத்தரவிட்டார்.

ஆன்மிக ஆட்சி

இதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கூறும்போது, ‘‘பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்துள்ளதால், நான் முன்பு சொன்னது போலவே தமிழகத்தில் நடப்பது ஆன்மிக ஆட்சி என்பதை தமிழக முதல்வர் மெய்ப்பித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x