Published : 09 May 2022 07:38 AM
Last Updated : 09 May 2022 07:38 AM

இலங்கைக்கு அனுப்பும் அரிசி குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை: அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரிக்கை

சென்னை: தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் துன்பத்திலிருக்கும் மக்களுக்கு உதவ, மத்திய அரசின் அனுமதியுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்பும் பணியை முதல்வர் துரிதப்படுத்தினார்.

அதன்படி, ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இறுதிப்படுத்திட தாமதமாகும் நிலையில் உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் அரிசி ஆலை அதிபர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகியகாலத்தில் உற்பத்தி செய்ய முடிந்த 51 ஆலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன.

ஆந்திரா பொன்னி, ஏடிட்டி-45, கோ-51 போன்ற உயர் ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு, 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் சிலர் இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கு வாங்காமல் அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டதுபோல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இது தவறான பொய்ப் பிரச்சாரமாகும்.

மத்திய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, ரூ.20 விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கும் அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும், மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும். இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது.

இதனால்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x