

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் குப்பையை வகை பிரித்து வழங்குவது தொடர்பாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பின்னரே அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்களால் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படுகிறது. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை என முறையாக வகை பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் வகை பிரித்து வழங்கப்படுவது இல்லை.
திடக்கழிவு மேலாண்மை விதிகள்களின்படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும் மக்காத குப்பையாக பிரித்து அன்றாடம் வழங்குவது மிகவும் இன்றியமையாத ஒன்று. எனவே, குப்பையை வகை பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலம் சிவன் பூங்காவில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பின்னர் குப்பை வகை பிரிப்பதில் மக்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பையாக பிரித்து அன்றாடம் வழங்குவது மிகவும் இன்றியமையாத ஒன்று. எனவே குப்பைகளை வகை பிரித்து வழங்காதவர்களுக்கு முதலில் 15 நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பின்னரே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதன்படி, தனி நபர் மற்றும் வீடுகளுக்கு ரூ.100, அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, அதிக அளவில் குப்பைகளை உருவாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விரைவில் சென்னையில் 100 சதவீதம் குப்பையை வகை பிரித்து பெறுவது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.