Published : 09 May 2022 06:19 AM
Last Updated : 09 May 2022 06:19 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த தாழையம்பட்டு கிராமத்தில் துர்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி, கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இதில், யாகசாலை வழிபாடுகளுடன் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களான பிரசன்ன வெங்கடாஜலபதி, விநாயகர், பாலமுருகன், நவகிரகங்கள், புதிதாக அமைக்கப்பட்ட அனுக்கிரக பாபா கோயில் கோபுரங்கள் மீது, யாகசாலையில் அமைக்கப்பட்டிருந்த புனித கலசநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும், கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையில், சுமார் 1,500 கோயில்களில் ரூ. 1,000 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடப்பாண்டில் திருப்பணிகள் நடைபெற உள்ளன.
குறிப்பாக, காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோயில்களில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT