Published : 09 May 2022 06:08 AM
Last Updated : 09 May 2022 06:08 AM

கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல: முனீஸ்வரன் கோயில் விழாவில் பங்கேற்ற சசிகலா கருத்து

மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற சசிகலா, சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சசிகலா தெரிவித்ததாவது: அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். வரும் காலத்தில் நிச்சயமாக அதிமுகவுக்கு தலைமை வகிப்பேன். தமிழகத்தில் அடுத்த ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சிதான். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

ஓராண்டு திமுக ஆட்சி சாதனை ஆட்சி என முதல்வர் கூறிக் கொள்ளலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களுக்கு இந்த ஓராண்டு ஆட்சி திருப்தியாக இல்லை.

கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் கஷ்டம். கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல.

சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தால் மட்டும் போதாது. இந்து சமயத்தின் நடைமுறைகளை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

திமுக 'திராவிட மாடல்' எனக் கூறி ஆட்சி நடத்திக் கொள்ளலாம். ஆனால் கோயில்களின் நடைமுறைகளை மாற்றக் கூடாது. கோயில்களுக்கு உள்ளே சென்று அரசியல் செய்ய வேண்டாம் என்பது என் எண்ணம். அதனை திமுக திருத்திக் கொள்ள வேண்டும்.

நிலக்கரி தொடர்பாக முதல்வரும், மின்சாரத் துறை அமைச்சரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என, அரசு அறிவித்துள்ள நிலையில் வேலைக்குச் செல்லும் நேரத்தில் பஸ் கிடைக்காமல் பெண்கள் அவதியுற்று வருகின்றனர். அவர்கள் குறைந்த கட்டணத்திலாவது சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் தமிழக அரசு சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x