Published : 09 May 2022 06:00 AM
Last Updated : 09 May 2022 06:00 AM

திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு கசக்கிறது: அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்

தி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ரூ.15 கோடி மதிப்பில் கான்கிரீட் சாலைக்காக அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். அருகில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை: திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு கசக்கிறது என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் (பே கோபுர வீதி) ரூ.15 கோடியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஓராண்டில் அரசின் அரும் பணிகளின் அணிவகுப்பு எனும் அரசின் சாதனை புத்தக மலர் வெளியிடும் விழா தி.மலை காந்தி சிலை முன்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித் தார். நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி வேல் வரவேற்றார். மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்ட அரசின் சாதனை மலரை பெற்று கொண்டு பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.321 கோடி மதிப்பில் 186 பணிகள் நடைபெறுகின்றன. மேலும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்த, தமிழகத்தில் 32 சாலைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. அதில், 2 சாலை தி.மலை மாவட்டத்தில் நடை பெறவுள்ளது. திருக்கோவிலூர் - திருவண்ணாமலை இடையே ரூ.140 கோடியில், திருவண்ணாமலை - அரூர் - தருமபுரி சாலையை ரூ.120 கோடியில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளன.

திருவண்ணாமலையில் நடை பெற்ற சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில், ஆட்சிக்கு வந்த முதல் நிதியாண்டில், அண்ணா மலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன் அடிப் படையில், ரூ.15 கோடியில் கான் கிரீட் சாலை அமைக்க நிதி ஒதுக்கி பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருவூடல் தெரு குறுகலாக உள்ளது. இந்த தெருவை அளவீடு செய்யும்போது குறைந்து காணப்படுகிறது. இருபுறமும் நடை பாதையும், நடுவே சாலை அமையவுள்ளது. சாலையின் கீழ் பகுதியில் மின் வயர்களை கொண்டு செல்ல ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி சார்பில் குழாய் புதைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட் டத்துக்கு ரூ.25 கோடி செல விடப்படவுள்ளது.

பிரித்து பார்க்க முடியாது

திராவிட மாடல் என்றால் சிலருக்கு கசக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் ஆன்மிகத்துக்கு செய்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை விட ஆன்மிகத்துக்கு எந்த ஆட்சியாளரும் பணியை செய்யவில்லை. எங்கள் அமைச்சர் சேகர்பாபு, அதிகாலை 5.30 மணிக்கு எதாவது ஒரு கோயிலை திறந்து வைக்கிறார். ஆன்மிகத்தையும் திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது” என்றார்.

முன்னதாக அவர், திருவண் ணாமலை அடுத்த மெய்யூர் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மேலும், திருவண்ணாமலை புதுகார்கானா தெருவில் புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் ஆட்சியர் பிரதாப், திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் கம்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x