பாஜகவில் இணைந்தார் திருச்சி சிவா எம்.பி மகன் சூர்யா

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார் சூர்யா சிவா.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார் சூர்யா சிவா.
Updated on
2 min read

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்துள்ளார். மாற்றுக் கட்சியில் இணைய தனது தந்தை மறுத்த நிலையில் அதனை தான் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.

நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

"திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்" என பாஜகவில் இணைந்ததும் சூர்யா தெரிவித்தார்.

முன்னதாக, இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு சூர்யா சிவா அளித்த பேட்டி:

தந்தை ஏற்கவில்லை

கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால், கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். மேலும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டதால் என்னையும், எனது மனைவி மற்றும் குழந்தைகளையும் எனது தந்தை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு திமுகவில் எந்த பதவியும் கிடைக்காமல் தடுப்பதில் எனது தந்தையும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியும்கூட, அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவில் மேல்மட்ட நிர்வாகிகளின் போக்கு, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், இப்போது வேறு மாதிரியாகவும் உள்ளது. ஆட்சியில் இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை தற்போது கண்டுகொள்ளவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை தூக்கிப்பிடித்து பதவி வழங்குகின்றனர். ஆனால், பரம்பரை கட்சிக்காரர்கள் மதிக்கப்படுவதில்லை. கட்சியின் கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் குறித்து கவலைப்படுவதில்லை. இதனால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் விரக்தி நிலவுகிறது. இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் திமுக அழிந்துவிடும்.

எனவேதான், தொலைநோக்கு பார்வையின்படி பாஜகவில் இணைந்துள்ளேன். அந்தக் கட்சி தான் நாட்டை வலிமையாக்கி, வளப்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சி அமையும். பதவி, அடையாளத்துக்காக நான் அங்கு செல்லவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in