Published : 08 May 2022 04:41 PM
Last Updated : 08 May 2022 04:41 PM

தமிழகம் முழுவதும் ஷவர்மா கடைகளில் ஆய்வு தொடரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சேலம்: நமக்கான உணவு நிறைய உண்டு. அதனை விடுத்து, ஷவர்மா மாதிரி புதிய புதிய பெயர்களில் வரும் உணவுகளை வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு தொடரும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்று 1 லட்சம் மையங்களில் 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஷவர்மா என்பது ஒரு மேலை நாட்டு உணவு. இறைச்சியை சுருட்டி வைத்து அதில் மசாலா சேர்த்து தீயில் வாட்டி சமைத்து சுரண்டிக் கொடுக்கிறார்கள்.மேலை நாடுகளில் உள்ள பருவநிலைக்கு இறச்சியை அவ்வாறாக பதப்படுத்திக் கொடுப்பது பொருந்தும். அங்கு நிலவும் மைனஸ் டிகிரி மாதிரியான சூழலில், அதை வெளியிலேயே வைத்திருந்தாலும் அது கெட்டுப்போகாது.

ஆனால், நம் நாட்டு பருவநிலைக்கு, அதை எப்போதுமே வெளியில் தொங்கவிட்டு, சுரண்டிக் கொடுப்பது சரிவராது. மேலும், அந்தக்கறியை சேமித்து வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதியும் சரிவர பல கடைகளில் இருப்பதில்லை. எனவே மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாம் நமக்கான உணவுகளை உண்போம். அதனை விடுத்து, ஷவர்மா மாதிரி புதிய, புதிய பெயர்களில் வரும் உணவுகளை வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு தொடரும்" என்றார் அவர்.

முன்னதாக, வடக்கு கேரளாவில் காசர்கோடு அருகே சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானார். அதே கடையில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால், தமிழக அரசும், அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சிக்கன் ஷவர்மா கடைகளை ஆய்வு செய்யும்படி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தஞ்சையில் மூவருக்கு ஷவர்மா சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அண்மையில் மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலை அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினர்.

அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஷவர்மா கடைகளில் ஆய்வு தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x