Last Updated : 08 May, 2022 03:06 PM

 

Published : 08 May 2022 03:06 PM
Last Updated : 08 May 2022 03:06 PM

ஜிப்மரில் இந்தி கட்டாயம் | இயக்குநர் உத்தரவை எதிர்த்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இயக்குநர் உத்தரவை எதிர்த்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் ''புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றது. புதுச்சேரி நிலப்பரப்பில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி இளைஞர்கள் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர், செவிலியர், அலுவலக அதிகாரிகள் பணியிடங்கள் முற்றிலும் வெளிமாநிலத்தவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவுப் பணிகள் மட்டுமே புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினால் ஒப்பந்த ஊழியர்களும் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதால் பணியாளர்களை வழங்கும் ஒப்பந்த நிறுவனங்களின் பெயர்களை மாற்றி விடுகின்றனர். இதை யாரேனும் தட்டிக் கேட்டால் அந்த ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் பணி வழங்காமல் நீக்கி விடுகின்றனர்.

மேலும் ஒப்பந்த பணிக்கே பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் ஒப்பந்த நிறுவனங்கள் வேலை வழங்குகின்றன. இதுபற்றி ஜிப்மர் அதிகாரிகள் தெரிந்தும், தெரியாததைப்போல் உள்ளனர்.

இவ்வாறு பல வகையில் அடக்குமுறைகளை கையாண்டு வரும் ஜிப்மர் அடுத்தக்கட்டமாக இந்தி மொழியை திணிக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே அனைத்தும் பயன்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கதக்கது. தரமான சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்று இருந்த ஜிப்மர் நிர்வாகம் தற்போது கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது. இந்தி திணிப்பு என்பது தரமான சிகிச்சையை கேள்விக்குறியாக்கும்.

எனவே இந்தி திணிப்பை கைவிட வேண்டும், புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கப்படாமல் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஜிப்மரில் உள்ள மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நாளை (9.5.2022) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் ஜிப்மர் எதிரில் திமுக மாநில கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x