'பதிவேடு தொடங்கி கணக்குகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்க வேண்டும்' - ஜிப்மர் இயக்குநர் உத்தரவு

'பதிவேடு தொடங்கி கணக்குகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்க வேண்டும்' - ஜிப்மர் இயக்குநர் உத்தரவு
Updated on
2 min read

புதுச்சேரி: ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம் என்று அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன் குறிப்பாணையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் மத்திய அரசு மருத்துவமனையான ஜிப்மர் உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இச்சூழலில் புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவு அலுவல் மொழி விதி 1976-ன்படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்கவேண்டு்ம். நாடாளுமன்றக் குழுவுக்கு வழங்கப்பட்ட உறுதி எண் 7-ன்படி அலுவல் மொழியாக இவை இருக்கவேண்டும்.

ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவைக் கணக்குகள் என எல்லாவற்றின் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படும். எதிர்காலத்தில் பதிவேடுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டும் எழுத வேண்டும்.

அனைத்துத் துறைகளின் தலைவர்கள், பிரிவு பொறுப்பாளர்கள், ஊழியர்கள் அனைவரும் இவ்விதியை கண்டிப்பாக கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக அலுவல் மொவி தொடர்பாக நாடாளுமன்ற குழுவுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகள், அதன் பொறுப்பு அதிகாரிகள் மூலம் இவ்விஷயத்தில் கண்காணிக்கப்படும். இதுதொடர்பாக உதவி தேவைப்பாட்டால் இந்தி செல்லை அணுகலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிப்மரில் சிகிச்சைக்கு வருவோரில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் மக்கள்தான். அதே நேரத்தில் பதிவேடுகள், சேவைப்புத்தகங்கள் ஆகியவற்றில் இந்தி மட்டுமே வரும்காலத்தில் இடம் பெறுமானால் அது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று நோயாளிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து ஜிப்மர் வட்டாரம், "ஏற்கெனவே நோயாளி குறிப்பேடு, சேவை கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெறுகிறது. தமிழ் கிடையாது. புதுச்சேரி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் இந்தி மட்டுமே இருக்கவேண்டும் என்று வெளிப்படையாக இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இங்கு தமிழர்கள், இதர மாநிலத்தவர்கள் அதிகளவில் பணியில் உள்ளனர்." என்று குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாகவே ஜிப்மர் மீதான புகார்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு குறிப்பாக மத்திய அரசு நிதியை திருப்பி அனுப்பியதாக கட்சிகள் குற்றஞ்சாட்டின. நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை விநியோகமின்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு உள்ள சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in