Published : 08 May 2022 04:56 AM
Last Updated : 08 May 2022 04:56 AM

காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் வழிநின்று கடமையாற்றுவேன்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆரின் பணிகளை மறக்கமாட்டேன்; அவர்கள் வழிநின்று கடமையாற்றுவேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று சட்டப்பேரவையில், தலைவர்கள் படங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பேரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தனர். பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற னர்.

ஓராண்டு நிறைவை ஒட்டி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று முதல்வராகப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டில் மக்களுக்கு உண்மையுடனும், உளப்பாங்குடனும் உழைத்திருக்கிறேன். ஒரு நாட்டின், மாநிலத்தின் வரலாற்றில் துளி போன்ற இந்த ஓராண்டில் கடல் போல் விரிந்த சாதனைகளைச் செய்துள்ளோம்.

பெண்கள் சமூகத்தில் மாற்றம்

நமது திட்டங்களின் பயன்கள் சென்று சேராதவரே இல்லை. மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம், பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

நான் கோபாலபுரம் சென்றுவிட்டு திரும்பும்வழியில், ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, 29-சி பேருந்தில் ஏறினேன். என்னுடைய பள்ளிப் பருவத்தில், 29-சி பேருந்தில்தான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் ஏறி, ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேத்துப்பட்டுக்கு நடந்து போய், பள்ளிக்குச் சென்று படித்தேன். அந்த பேருந்தில் தான் இன்று நான் பயணித்தேன்.

பயணிகளிடம் இந்த ஆட்சி குறித்து கேட்டபோது, ‘‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது. உங்களைப் பார்த்ததே அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றனர். பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக மாதம் ரூ.600-ல் இருந்து ரூ.1,200 வரை மிச்சம் ஆகிறது.

கடந்த ஏப்.30 வரை 106.34 கோடி பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளனர். இதுதான் மகத்தான சாதனை. குறைவான மாதச் சம்பளம் பெறக்கூடிய பெண்களுக்கு வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக் கூடிய திட்டமாக இது அமைந்திருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி

ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி. ஒரே ஒரு கையெழுத்தின் காரணமாக, பல கோடிப் பேருக்கு நன்மை கிடைத்திருக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் இந்த ஓராண்டு காலத்தில் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.

மேலும், இந்த ஓராண்டு காலத்தில் மகத்தான முன்னெடுப்புகள் பல செய்யப்பட்டுள்ளன. 75-வது சுதந்திர நாள் நினைவுத்தூண், சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் மாபெரும் மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், சென்னையில் கருணாநிதி நினைவு மண்டபம், அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம், வேளாண்மைத் துறைக்காகத் தனி நிதிநிலை அறிக்கை, இல்லம் தேடிக் கல்வி திட்டம் என, இத்திட்டங்களை உள்ளார்ந்த நோக்கம் சிதையாமல் அமல்படுத்தினோம் என்றால் தமிழகம் சிறந்த மாநிலமாக உயரும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றில், இந்த ஓராண்டு காலத்தில் 60 முதல் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம்.

நாங்கள் சொன்னதைச் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இந்த அரசுக்கு இருக்கும் பாதை, நோக்கம்தான் ‘திராவிட மாடல்’. ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதுதான் இதனுடைய உள்ளடக்கம்.

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி

இந்த அவைக்கு மட்டுமல்ல, அரசுக்கும் முன்னவராக இருந்து என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் துரைமுருகன். அவருக்கும் என்னுடன் தோள் நிற்கும் அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் தலைமைச்செயலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஓராண்டில் அனைத்தையும் சாதித்துவிட்டேன் என்று நான் சொல்லிக் கொள்ளவில்லை. அப்படி சொல்லிக் கொள்ளவும் மாட்டேன். ஓராண்டு காலத்துக்குள் செய்யக்கூடியதைவிட அதிகமாகச் செய்துவிட்டோம் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். நாம் போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இன்னும் வேகமாகச் செல்ல முடியாததற்கு தடையாக இருப்பவை நிதிநிலை நெருக்கடியும், ஒன்றிய அரசாங்கத்தின் சில நிலைப்பாடுகளும். இந்த இரண்டு தடைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை நம்மால் தீட்டி இருக்க முடியும்.

மற்றவர்களின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்யக்கூடியவன் நான் அல்ல; என் பலத்தை நம்பியே நான் அரசியல் செய்ய நினைக்கிறேன். எனது பலம் என்பது எனது இலக்கில் இருக்கிறது. இந்த இலக்கை எப்படியும் நான் அடைவேன்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன். இந்த முதலாண்டு முத்தான தொடக்கமாக அமைந்திருக்கிறது. இரண்டாமாண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப் போகிறது. இனி எந்நாளும் திமுக ஆட்சிதான். நாம் அனைவரும் இணைந்து நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முதல்வரின் கருத்துகளைச் சுட்டிக்காட்டி பேசினர்.

முன்னதாக, கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜக), சிந்தனைச்செல்வன் (விசிக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக) ஆகியோரும் முதல்வரையும், அரசையும் வாழ்த்திப் பேசினர்.

நிறைவாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன், ‘‘இந்த இடத்தில் முதல்வராக இருந்து ஆட்சி நடத்தி, சமுதாயத்துக்காக உழைத்த காமராஜர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, அவரது நண்பராக இருந்த எம்ஜிஆராக இருந்தாலும் அவர்கள் ஆற்றியுள்ள பணிகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர்கள் வழிநின்று என்றும் கடமையாற்றுவேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x