Published : 08 May 2022 06:47 AM
Last Updated : 08 May 2022 06:47 AM
சென்னை: தமிழகத்தில் ஓராண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவின் பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நம்பி, மக்கள் வாக்களித்தனர். அதன் விளைவாக தமிழகத்தில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக, கடந்த ஓராண்டில் மக்கள் இன்பங்களை மறந்து, துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர். மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு வாக்களித்தார்களோ, அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
நேர்மையான, சுதந்திரமான, நியாயமான ஆட்சி நடக்கிறதா என்றால், அதுவும் இல்லை. மக்கள் அன்றாடம் வேதனைகளை சந்திக்கின்றனர்.
திமுக கவுன்சிலர்களால் மக்கள் துன்பப்படுகிறார்கள். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கொலை, கொள்ளை என குற்றச் செய்திகள் தினமும் வந்த வண்ணம் உள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. திமுகஅரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்தத்தில், மக்களுக்கு பயன்தராத, துன்பங்கள் நிறைந்தது திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ் குற்றச்சாட்டு
சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓராண்டு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக உண்மைக்கு மாறான ஒரு விளம்பரத்தை முதல்வர் வெளியிட்டு சட்டப்பேரவையில் பேசியுள்ளார். இந்த ஓராண்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, இதுவரை செய்யமுடியவில்லை. இன்று ஓராண்டை கொண்டாடுகின்றனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனைதான் மிச்சம். முதல்வர் சாதனை பட்டியலை வெளியிட, மக்கள் வேதனை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா கருத்து
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,‘ ‘திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் மனம் நிறைந்ததாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மக்கள் மனதில் இந்த ஆட்சி மீது வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT