Published : 08 May 2022 06:05 AM
Last Updated : 08 May 2022 06:05 AM

அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமைக்கு புதிய சட்டம்: நலச் சங்கம் பதிவு செய்யாவிட்டால் அபராதம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை தொடர்பான பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய சட்டம் கொண்டுவருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் குடியிருப்பு உரிமையாளர் நல அமைப்பு பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிகளில் குடியிருப்போரின் நலன் பேணும் வகையில், தமிழ்நாடு தனி இருப்பிட சொத்துரிமை சட்டத்தை நீக்கிவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை சட்டத்தை கொண்டுவருவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று தாக்கல் செய்தார்.

சட்ட மசோதாவுக்கான நோக்க காரண உரையில் அமைச்சர் கூறியிருப்பதாவது:

அடுக்குமாடி குடியிருப்பு சமுதாயத்தை திறம்பட நிர்வகிப்பது மற்றும் குடியிருப்பு உரிமையாளர்களின் உரிமைகள், கடமைகளை அங்கீகரிப்பதே தமிழ்நாடு தனி இருப்பிட சொத்துரிமை சட்டத்தின் (1994) நோக்கம். சொத்தில் உள்ள பொதுவான பரப்பிடங்கள், வசதிகளின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள குடியிருப்பு உரிமையாளர்களின் நல அமைப்பு அல்லது சங்கத்தை உருவாக்க இச்சட்டம் திட்டமிடுகிறது.

தற்போது வீட்டுவசதி துறை கடும் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் வீட்டுவசதி தொழில், ஆற்றல் மிக்க வளர்ச்சி, அசையா சொத்து விற்பனை தொழிலின் விரிவாக்கம், வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களின் உரிமைகள், பொறுப்புகளை திறம்பட வரையறுத்து, அடுக்குமாடி குடியிருப்பு சமூகத்தை திறம்பட நிர்வகித்தல், பராமரித்தலை வழங்க, தனி இருப்பிட சொத்துரிமை சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் இயற்ற மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் அம்சங்கள்

புதிய சட்டத்தின் அம்சங்கள் குறித்து வீட்டுவசதி துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ் மட்டுமே சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

* ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது.

* குறைந்தபட்சம் 4 குடியிருப்புகள் கொண்ட வீட்டு வளாகங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

விதிகளின்படி அபராதம்

* குடியிருப்பு உரிமையாளர் நல அமைப்பு பதிவு செய்யப்படுவதை புதிய சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. தவறும் பட்சத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

* சங்க நிலுவைத் தொகையை வசூலிக்க, அடுக்குமாடி குடியிருப்பு மீது கட்டணத்தை உருவாக்கவும் விதி சேர்க்கப்பட்டுள்ளது.

* பல கட்டங்களாக உருவாக்கப்பட்ட சங்கங்கள் கூட்டமைப்பை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* பழமையான பல அடுக்குமாடி குடியிருப்புகள் மறுசீரமைப்பு செய்ய முடியாத நிலையில் உள்ளன. அதை கருத்தில் கொண்டு, திட்டத்தின் அடுக்குமாடி குடியிருப்பு சொத்து உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறையாமல் இசைவு தெரிவித்தாலோ அல்லது கட்டிடம் அழிவுறு நிலையில், அல்லது குடியிருப்பாளர்கள் அல்லது நபர் எவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டு, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு சான்று அளித்தாலோ மறுசீரமைப்பு செய்ய புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

* பிரிக்கப்படாத பகுதியின் சதவீதத்தை (UDS) கணக்கிட ஒரு நிலையான மற்றும் குறிப்பிட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது.

* புதிய சட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x