

சென்னை: திமுக அரசின் ஓராண்டு சாதனைக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழ்ச் சமுதாயத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற தீவிர முனைப்பின் காரணமாக அவர் செயல்பட்டதால் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இதை பெற, ஓய்வறியாமல் உழைத்திருக்கிறார். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பயணம் செய்கிறது என்று சொன்னால் அதற்கு முதல்வரின் கடுமையான உழைப்புதான் காரணம். 10 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய சாதனைகளை ஓராண்டில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தமிழகத்தை அனைத்து துறைகளிலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றும் முயற்சியில் முதல்வர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் ஓராண்டிலேயே 207 நிறைவேற்றப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை உரிமைகளில் முதன்மையானது மாநில உரிமை. இதை நிலை நிறுத்துவதற்காக தயக்கமின்றி மத்திய அரசை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்புகிறார் முதல்வர். இன்னும் 4 ஆண்டுகளில் குவிய இருக்கும் சாதனை மலைகளின் முன்பு எதிர்க்கட்சிகளும், மதவாத ஆதிக்க சக்திகளும் கண்ணுக்கே தெரியமாட்டார்கள் என்பது உறுதி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: திமுக தலைவர் ஸ்டாலினின் சீரிய தலைமையில் அமைந்த அரசு ஓராண்டை நிறைவு செய்து, 2-வது ஆண்டில் வீறுநடை போட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட விரிவாக்கம், பழைய ஓய்வூதிய திட்டம், போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகள் உள்ளிட்ட தொழிலாளர் நலன் பேணும் நடவடிக்கைகள் போன்றவற்றிலும் இந்த அரசு சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை இழையோடி நிற்கிறது.அரசு பல்லாண்டு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.