Published : 08 May 2022 05:48 AM
Last Updated : 08 May 2022 05:48 AM

திமுக ஆட்சி ஓராண்டு: சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டம் - முதல்வருக்கு வாழ்த்து கூறி தொண்டர்கள் உற்சாகம்

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். (அடுத்த படம்) ஓராண்டுகால திமுக ஆட்சியின் சாதனை நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, நீண்ட வரிசையில் வந்த தொண்டர்கள் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.படங்கள்: ம.பிரபு

சென்னை: திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வருக்கு தொண்டர்கள் வாழ்த்து கூறும் விழாவுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதை முன்னிட்டு, அறிவாலயம் வண்ண விளக்குகள், சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்தே அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர்.

முதல்வர் ஸ்டாலின் மாலை 5.47 மணிக்கு அறிவாலயம் வந்தார். அங்கு அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடைக்கு வந்த முதல்வருக்கு அனைவரும் உற்சாகத்துடன் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சுப்பராயன் எம்.பி.ஆகியோர் முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

பின்னர், திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் நீண்ட வரிசையில் வந்து முதல்வருக்கு சால்வை, கருணாநிதி புகைப்படம், கருணாநிதியின் சிறிய சிலை, புத்தகம், பூங்கொத்து, மலர்ச்செண்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கியும், கைகுலுக்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

பலரும் முதல்வரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். சிலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சில அமைச்சர்களின் குடும்பத்தினர், உறவினர்களும் முதல்வருக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேடையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்ற முதல்வர், நீண்ட வரிசையில் வந்த தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார். முதல்வரை நேரில் பார்த்து, கைகுலுக்கி வாழ்த்தியதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

முதல்வருடன் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோரும் மேடையில் நின்றிருந்தனர். முதல்வருக்கு வாழ்த்து சொல்ல அறிவாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x