Published : 08 May 2022 09:09 AM
Last Updated : 08 May 2022 09:09 AM

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த கோத்தகிரி காய்கறி கண்காட்சி

கோத்தகிரியில் நேற்று தொடங்கிய காய்கறி கண்காட்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்த பல்வேறு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒட்டகச்சிவிங்கி, கிடார், கிளி உருவங்கள்.

உதகை: கோத்தகிரியில் தொடங்கிய காய்கறி கண்காட்சியில், காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒட்டகச்சிவிங்கி, மீன், கிடார் உள்ளிட்ட அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில்‌ சுற்றுலாப் பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களை உற்சாகப்படுத்தவும்‌, கவரவும் மே மாதத்தில்‌ கோடை சீசனின்போது தோட்டக்கலைத்‌ துறை சார்பில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை சீசன் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறைந்ததால், இந்த ஆண்டு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில்‌ 11-வது காய்கறி கண்காட்சியுடன்‌ கோடை விழா நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர்‌ சா.ப.அம்ரித் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தலைவரும், மேலாண்மை இயக்குநரும், சுற்றுலா இயக்குநருமான சந்தீப் நந்தூரி பங்கேற்றார்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ காய்கறி வளங்களை பறைசாற்றும்‌ வகையில், பல்வேறு காட்சித் திடல்களை அமைத்து அனைத்து விதமான காய்கறிகளும்‌ காட்சிப்படுத்தப்பட்டன. நீலகிரி மாவட்டத்தின்‌ இயற்கை வேளாண் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்‌ மூலமாக இயற்கை‌ வேளாண்மை காட்சி திடல்கள்‌ அமைக்கப்பட்டன.

குழந்தைகள்‌, பொதுமக்கள்‌ மற்றும்‌ சுற்றுலாப் பயணிகளை கவரும்‌ வகையில்‌ சுமார்‌ ஒன்றரை டன்‌ காரட்‌ மற்றும்‌ 600 கிலோ முள்ளங்கியைக் கொண்டு ஒட்டகச்சிவிங்கி (குட்டியுடன்‌) உருவாக்கப்பட்டிருந்தது. மேலும், மீன்‌, கிட்டார்‌, கடிகாரம்‌, உதகையின்‌ 200-வது ஆண்டை போற்றும்‌ வகையில் 'ஊட்டி 200' என்ற சிறப்பு அலங்காரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

திருவண்ணாமலை, தருமபுரி, தேனி, திண்டுக்கல்‌, காஞ்சிபுரம், விழுப்புரம், ‌கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மயில், முதலை, கிளி, கங்காரு, பாண்டா, கப்பல்‌ மீன்‌, டோரா உள்ளிட்ட வடிவங்களும்‌ காட்சிப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும்‌ நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x