

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து மண்ணடியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திமுக வெறும் அரசியல் கட்சி மாத்திரமல்ல. அதுவொரு சமுதாய புரட்சி இயக்கமாகும். திமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை சிறப்பான ஆவணமாக உள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னதைச் செய்யும், செய்வதைச் சொல்லும் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது ஆட்சி அல்ல, காணொலி காட்சி மட்டுமே. வன்ம அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவோம் என்று சொல்லிவிட்டு, பாட்டில் குடிநீர் பத்து ரூபாய் என்று விற்பனை செய்கின்றனர். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். ஏதோ கருத்துக்கணிப்பை வைத்து இதை சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்துவிட்டு இந்த உண்மையைச் சொல்கிறேன்.
இவ்வாறு வீரமணி கூறினார்.