

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 31-ம் தேதி கடைசி நாளாகும்.
தற்போதுள்ள 231 எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் படி அதிமுக 4 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெல் லும் வாய்ப்பு உள்ளது. அதன்படி அதிமுக 4 பேரையும், திமுக 2 பேரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் நேற்று முன்தினம் (மே 26) வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சி யின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஏ.நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஏ.விஜயகுமார், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று பகல் 1 மணிக்கு சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஏ.எம்.பி. ஜமாலுதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அனைவரும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்றனர்.
4 பேரும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்தனர். முதலில் ஆர்.வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அடுத்து ஏ.நவநீதகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தபோது அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர். விஜயகுமார் மனு தாக்கல் செய்தபோது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரனும், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தபோது அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 4 பேரும், திமுக சார்பில் 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் 4 வேட்பாளர்களும் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஏ.நவநீதகிருஷ்ணன் வேட்பு மனுதாக்கல் செய்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.