

ஊராட்சித் தலைவியின் கணவர்கள், மகன்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்க வேண்டும், என தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் நிலவி வருகிறது. கடந்த 30-ம் தேதி காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில், தாமோதரஹள்ளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் சின்னசாமியை ஊராட்சித் தலைவரின் கணவர் தாக்கி உள்ளார்.
இதுதொடர்பாக நாங்கள் ஆட்சியரை சந்தித்து முறையிட்டுள் ளோம். அவரும் இது தொடர்பாக விசாரணை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெண் ஊராட்சித் தலைவர்கள் பதவியில் உள்ள இடங்களில் அவர்களின் கணவர்கள், மகன்கள் ஆதிக்கம் செலுத்தி ஊராட்சி செயலாளர்களை மிரட்டி வருகிறார்கள். ஊராட்சித் தலைவியின் கணவர்கள், மகன்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்க வேண்டும். இதேபோல 3 ஆண்டுகள் ஒரே ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்களை வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்யலாம். இதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமோதரஹள்ளியில் ஊராட்சி செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.