பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 10-ல் தொடங்குகிறது

பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 10-ல் தொடங்குகிறது
Updated on
1 min read

பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 10-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் இத்தேர்வை 8.90 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 பொதுத் தேர்வு வரும் 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது.

முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க உள்ளன. இத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து 8.90 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 5,673 தனித் தேர்வர்கள், 5,299 மாற்றுத் திறனாளிகள், 4 மூன்றாம் பாலினத்தவர், 99 சிறை கைதிகள் அடங்குவர்.

இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்கு 115, சிறை கைதிகளுக்கு 9 தேர்வு மையங்கள்பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 167 மையங்களில் 47,121 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்கிடையே, தேர்வு கண்காணிப்பாளர் பணியில் 47,315 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,291 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in