

அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை (பிஎச்எச்) ஆகிய பிரிவுகளில் உள்ள ரேஷன் கார்டுகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் விதவைகள், தீராத நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர், மலைவாழ் குடும்பங்கள் பயன்பெறுகின்றன. அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை உள்ள ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சில ஆண்டு களுக்கு முன்பு ரேஷன் கார்டுகளைப் பிரிக்கும்போது வசதி படைத்த பலருக்கு முன்னுரிமை கார்டும், ஏழைகள் பலருக்கு முன்னுரிமையற்ற கார்டும் வழங்கப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியாக உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.
அதன்படி உணவுப் பொருட்கள் வழங்கினாலும், கரோனா காலத்தில் முன்னுரிமையுள்ள கார்டுதாரர்களுக்கு மட்டும் கொண்டைக்கடலை வழங்கப்பட்டது. அப்போதும் பாதிக்கப்பட்டோர் தங்களது கார்டுகளை முன்னுரிமையுள்ளதாக மாற்றித்தரக் கோரி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில், குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, பெண்கள் குடும்பத் தலைவியாக உள்ள கார்டுகளுக்கு மட்டுமே மாதம் ரூ.1,000 கிடைக்கும் எனத் தகவல் பரவியது.
இதனால் ஆண்கள் குடும்பத் தலைவராக இருந்த கார்டுகளை, பெண்கள் குடும்பத் தலைவியாக மாற்ற இ-சேவை மையங்களில் ஏராளமானோர் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து ‘குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் முறைப்படி முதல்வர் அறிவிப்பார். இதனால் கார்டுகளை குடும்பத் தலைவி கார்டுகளாக மாற்ற வேண்டாம்’ என அப்போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
இந்நிலையில் அந்தியோதயா அன்னயோஜனா, முன்னுரிமை (பிஎச்எச்) ஆகிய ரேஷன் கார்டுகளில் பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்த இரு பிரிவு ரேஷன் கார்டுகளில் ஆண்கள் குடும்பத் தலைவராக இருந்தால், பெண்களை குடும்பத் தலைவியாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் புகைப்படம், ரேஷன் கார்டு நகல், மனுவில் ரூ.5 கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் வழங்க கார்டுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
இதை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சர்க்கரை, முன்னுரிமையற்ற மற்றும் எந்தப் பொருளும் வாங்காதவர்கள் பிரிவு கார்டுதாரர்களை அனுப்பினால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இது குறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இதற்கும் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 திட்டத்துக்கும் சம்பந்தமில்லை’ என்றார்.
மாதம் ரூ.1,000 திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் அரசிடம் இருந்தால், முன்னுரிமை, முன்னுரிமையற்ற கார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.