Published : 08 May 2022 12:52 AM
Last Updated : 08 May 2022 12:52 AM

‘கொடநாடு வழக்கின் க்ளைமாக்ஸ் நெருங்குவதால் பயம்’ - ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "மக்களுக்குப் பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுக-வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள்" என்பது போல் பேசியிருந்தார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் கருத்துக்கு பதில் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைக்கு முதல்வர், எத்தனைக் கோடிப் பேர் பயன்பெற்றார்கள் என்று சட்டமன்றத்தில் வாசித்த சாதனைப்பட்டியல் அதிமுகவை வழிநடத்தும் இரட்டைத் தலைமைக்கு எரிச்சலைத் தருகிறது. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் கொடுமை, அரை நிர்வாணமாகப் போராடியது, அவர்களுக்குரிய கடன் தள்ளுபடியை நிறுத்தி வைத்தது, கொடுமையான சட்டங்களின்கீழ் உழவர்களைக் கைது செய்து சிறையில் தள்ளியது ஆகியவற்றுக்கும் மேலாக உழவர்கள் தற்கொலை தொடர்கதையாக இருந்ததும் அதிமுக ஆட்சியில்தான்

சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் முதல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வரை அரங்கேறியது மட்டுமின்றி, அமைதி காத்துக் குற்றவாளிகளை முடிந்தவரை காப்பாற்ற முயன்றதும் இந்த இரட்டைத் தலைமைதான். பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொந்தரவு நடக்கும் விதமாக டிஜிபி அலுவலகத்தில் இரட்டைத் தலைமை நியமித்து தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றம் புரிந்தோரை காப்பாற்றியதும், குட்கா, கஞ்சா ஆகியவற்றைத் தாராளமாகப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் விற்க விட்டு ஒரு அபாயகரமான ஆட்சியை நடத்தியது இந்த இரட்டைத் தலைமைதான்.

நீட் தேர்வை அனுமதித்து அதற்கு விதிவிலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதையே மறைத்ததும் இந்த “இரட்டையர்கள்" தான். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநர் திருப்பி அனுப்பியபோது உடனடியாக மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி நிறைவேற்றி இன்றைக்கு அதைக் குடியரசுத் தலைவருக்கே ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட பிறகு நீட் தேர்வு பற்றிய வாக்குறுதி பற்றி இந்த ஆட்சியைப் பார்த்துக் கேள்வி எழுப்ப இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பது புரியவில்லை.

திராவிட மாடல் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளைச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் இருவரின் முகத்திற்கு முன்னால் வைத்து முதல்வர் நேருக்கு நேர் விளக்கியுள்ளார். அப்படி பழனிசாமி ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் விளக்க முடிந்ததா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

தமிழ்நாட்டை ஒருபுறம் கடனிலும், இன்னொரு புறம் மோசமான நிர்வாகச் சீரழிவிலும் விட்டுச்சென்ற முன்னாள் முதல்வர், இந்த ஆட்சியின் சாதனைகளை மறுக்க முடியாமல் வெறுப்பைக் கக்குகிறார். தென் மாவட்டங்களில் 100 படுகொலைகளுக்கு மேல் நடைபெற்றபோது இதே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எங்கே போனார்? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி காக்கை குருவிகள் போல் அப்பாவி மக்களைச் சுட்டு வீழ்த்தியபோது எங்கே ஒளிந்து கொண்டிருந்தார்? ஏன், பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் தொல்லை தாங்காமல் கதறி அழுது கை கூப்பி உதவி கோரியபோது எங்கே இருந்தார் ஓபிஎஸ்?

நாலாபுறத்திலும் சட்டம் ஒழுங்கை நாசம் பண்ணி விட்டு பத்தாண்டு காவல்துறையை அடியோடு சீரழித்து தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் போன இந்த இரட்டைத் தலைமை இப்போது அனைத்து வகையிலும் பாதுகாப்பான சமூக நல்லிணக்கத்திற்கு ஏற்ற அமைதியான தமிழ்நாட்டைப் பார்த்து பாஜகவின் ஊதுகுழலாக மாறி சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்றே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மோசமான, ஊழல் மிகுந்த, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த ஆட்சியை வழங்கி தமிழ்நாட்டையும் அதன் வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளிய பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் கொடநாடு வழக்கின் “க்ளைமாக்ஸ்” காட்சி நெருங்குவது பற்றிய பயத்திலோ என்னவோ திமுக மீதும் நல்லாட்சி மீதும் முதல்வர் மீதும் ஆதாரமற்ற அபாண்டமான அறிக்கைகளை விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு ஓபிஎஸ், இபிஎஸ் கருத்துக்களுக்கு பதில் கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x