Last Updated : 07 May, 2022 11:03 PM

 

Published : 07 May 2022 11:03 PM
Last Updated : 07 May 2022 11:03 PM

‘திராவிட மாடல்’ என்பதை ‘திராவிட மாதிரி’ என்று சொல்லலாமே - ஆளுநர் தமிழிசை

கோவை: புதிய கல்விக்கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கோவையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ரோட்டரி உத்சவ்-2022’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "தாய்மொழியை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதற்கு இங்கு சில பேருக்கு சிரமம் இருக்கிறது. இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றால், கற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். தாய்மொழியை கற்காமல் இருப்பது தான் தவறு. தாய்மொழியை கற்றுக்கொண்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு தாய் மொழியும் சரியாக தெரிவதில்லை. இன்னொரு மொழியையும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று இருக்கின்றனர். பிறகு எப்படி தான் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியும். ஆங்கிலம் கலக்காத தமிழில் நாம் பேசிப் பழகுவது நல்லது” என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல நல்ல திட்டங்களை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். திராவிட மாடல் என்று சொல்வதற்கு பதில் திராவிட மாதிரி என்றால் நன்றாக இருக்குமோ என்பது எனது யோசனை.

இன்னொரு மொழியை வேண்டாம் என்று சொல்வதற்குப் பதில், நமது தாய்மொழியை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும். 8 வயதுக்குக்குள் குழந்தைகளுக்கு அதிக மொழிகளை கற்றுக் கொடுக்கலாம். நிறைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் சக்தி குழந்தைகளின் மூளைக்கு உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x