

சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பென்சினர் லைன் 3-வது தெருவில் வசிக்கும் அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, 5-வது தெருவில் வசிக்கும் வடசென்னை மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் சித்திக் ஆகியோரின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சரக்கு வாகனங்களில் மூட்டை மூட்டையாக ஏதோ வந்து இறங்கியுள்ளது. உடனே அந்த பகுதியை சேர்ந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இருவரின் வீடுகளையும் முற்றுகையிட்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, மூட்டைகளில் கட்டி பணக்கட்டுகள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இரு வீடுகளுக்கும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டு அங்கிருந்து பொருட்கள் எதுவும் வெளியே கொண்டு செல்லாமல் பார்த்துக் கொண்டனர். வீடுகளில் சோதனை நடத்த பறக்கும் படைக்கு அதிகாரம் இல்லை என்பதால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதே நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பாலசுப்பிரமணி யனிடம் வண்ணாரப்பேட்டை திமுக வட்ட செயலாளர் கவுரீஸ்வரன் ஒரு புகார் மனு அளித்தார். அதில், இருவரின் வீடுகளிலும் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்' என்று கூறியிருந்தார்.
நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் இரு குழுக்களாக பிரிந்து இருவரின் வீடுகளிலும் இரண்டரை மணி நேரம் சோதனை நடத்திவிட்டு வெளியே வந்தனர். சோதனையில் பணம் எதுவும் சிக்கியதா அல்லது மூட்டை களில் இலவச பொருட்கள் எதுவும் இருந்ததா என்பது குறித்த எந்த தகவலையும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இருவரின் வீடுகளுக்கும் துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்பு தொடர்கிறது.