Published : 07 May 2022 04:35 AM
Last Updated : 07 May 2022 04:35 AM
சென்னை: சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்தது தொடர்பாக போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று விக்னேஷ் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசியதாவது:
அண்மைக் காலமாக தனியாக வசித்து வரும் முதியோர் தாக்கப்படுவதும், கொடூரமாக கொலை செய்யப்படுவதும், நகைகள் கொள்ளை அடிக்கப்படுவதும் முதியவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் விக்னேஷ் மரணம் குறித்து கடந்த ஏப்ரல் 26-ம் தேதி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டுவந்தேன். அப்போது முதல்வர் அளித்த பதிலும், விக்னேஷின் உடற்கூறு ஆய்வறிக்கையும் முரணாக உள்ளது. அவருக்கு 13 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது குறித்து ஏற்கெனவே இந்த அவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, அவையில் உள்ள கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் பேசினர். நான் பதிலளித்து பேசும்போது, ‘விக்னேஷ் இறப்பு குறித்து சந்தேக மரணம் என முறைப்படி வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தேன்.
இந்த வழக்கு, சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படை காவலர் தீபக் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேல் விசாரணைக்காக இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார். எனவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முறையாக எடுத்து வருகிறது.
தற்போது கிடைத்துள்ள உடற்கூராய்வு முடிவுகளின்படி, விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்துமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில் துரைசாமி, அவரது மனைவி ஜெயமணி ஆகியோரை கடந்த ஏப். 30-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி, நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதில் துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயமணி, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல, திருப்பூர் மாவட்டம் தம்பிரெட்டிப்பாளையத்தில் பழனிசாமி, அவரது மனைவி வள்ளியம்மாள் ஆகியோரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்து, வள்ளியம்மாள் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இரு வழக்குகளிலும் தாக்குதல் நடந்த விதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட முறை ஒன்றுபோல இருப்பதால், 2 சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. இது தொடர்பாக கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு முதல்வர் பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சிபிசிஐடி விசாரணை தீவிரம்
இந்நிலையில், விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விக்னேஷின் உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் பிரபு ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, காவலர்கள் பவுன்ராஜ், தீபக், எழுத்தர் முனாப், ஓட்டுநர் கார்த்திக், தலைமைக் காவலர் குமார், பெண்காவலர் ஆனந்தி ஆகிய 9 பேரை நேற்று நேரில் வரவழைத்து விரிவாக விசாரணை நடத்தினர். விக்னேஷ் உயிரிழப்பு சம்பவத்தை மறைப்பதற்காக, காவல் துறை தரப்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய பரிந்துரை
இதனிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹால்டர், கடந்த 4-ம் தேதி சென்னை வந்து, விக்னேஷின் மரணம் குறித்து விசாரித்தார். புழல் சிறையில் உள்ள விக்னேஷின் நண்பர் சுரேஷிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, போலீஸார் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும், புழல் சிறையில் தன்னை தொடர்ச்சியாக துன்புறுத்துவதாகவும் சுரேஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், வழக்கில் தொடர்புடைய போலீஸாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறும், அவர்களை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறும் டிஜிபிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், புழல் சிறையில் உள்ள சுரேஷுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சுரேஷ் மற்றும் விக்னேஷ் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மனித உரிமை ஆணையம்
இளைஞர் விக்னேஷ் மரணம் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT