Published : 07 May 2022 04:52 AM
Last Updated : 07 May 2022 04:52 AM
சென்னை: தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கிகளை வழங்கி அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
நவீன மயமாகும் காலச் சூழ்நிலைக்கேற்ப பணிகளை விரைவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதற்கேற்றவாறு நிர்வாக நடவடிக்கைகளை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
பட்டின பிரவேசம் பல்லக்கு தூக்கும் நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
விளம்பரங்களுக்காக ஆட்சி செய்யக்கூடிய அரசு இது அல்ல. முதல்வர் ஆன்மிகத்துக்கு எதிராக என்றாவது செயல்பட்டுள்ளாரா? கோயில்களின் வளர்ச்சிக்கு பல கோடி ரூபாய் அளித்துள்ளார். ஆன்மிக பக்தர்கள் கேட்ட அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்ட கொள்கை கோட்பாடுகளின்படி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக சில பிரச்சினைகளை கையில் எடுப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். அயோத்தியா மண்டபம் தொடர்பான நிகழ்வில், நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத் துறை செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT